தூத்துக்குடியில் பிறந்த சிவபாலன் என்ற அப்புக்குட்டி குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். ஆரம்பத்தில் ஹோட்டலில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்தவர் திரையுலக பிரமுகர்களிடம் வாய்ப்புக் கேட்டு சிறு சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் அப்புக்குட்டி.
1998 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி என்ற திரைப்படத்தில் தேனீர் விற்பவராக சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சொல்ல மறந்த கதை, கில்லி, மாயாவி, அழகிய தமிழ் மகன், ராமன் தேடிய சீதை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனாலும், 2009 ஆம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தில் நடித்ததன் வாயிலாக பிரபலமானார் அப்புக்குட்டி. பின்னர் ‘மதராசபட்டினம்’, ‘குள்ளநரி கூட்டம்’ போன்ற திரைப்படங்களில் நல்ல கதாபத்திரத்தில் நடித்து புகழடைந்தார். வெள்ளந்தியான முகத்தினாலும் எதார்த்தமான நடிப்பினாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அப்புக்குட்டி.
அடுத்ததாக ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக அப்புக்குட்டி அவர்களுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார். அதைத் தொடர்ந்து ‘சுந்தரபாண்டியன்’, ‘வீரம்’, ‘வெந்து தணிந்தது காடு’, போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் அப்புக்குட்டி. குறிப்பாக ‘வீரம்’ திரைப்படத்தில் இவர் நடித்த ‘மயில்வாகனம்’ கதாபாத்திரம் பிரபலமானது.
இந்நிலையில் தற்போது, அப்புக்குட்டி ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் சேதுபதி அவர்கள் வெளியிட்டார். படத்தின் வெளியீடு எப்போது பற்றிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.