நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 70களில் பட்டையைக் கிளப்பிய படம் எங்கள் தங்க ராஜா. இது மானவுடு தேனவுடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்.
குறுகிய காலத்திலேயே எடுக்கப்பட்ட படம். ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்ட படம். இந்தப் படம் வெளியாகும் வரை பாடல்கள் வெளியாகவில்லை. நடிகர் திலகம் சிவாஜிக்கு இரட்டை வேடம். கலர் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சென்சாரில் 14 ரீல்கள்.
படத்தின் ஓபனிங் சீனில் சிவாஜி கைகூப்பி வணங்கும்போதே தியேட்டரில் கைதட்டல், விசில் காதைப் பிளந்தது. 3 நாள் படத்திற்கு டிக்கட் வாங்க முடியவில்லையாம். அரங்கு நிறைந்த காட்சிகள். இலவச பாஸ் கிடையாது. படம் வெளியான 2வது வாரமே பேப்பரில் 101 நாள்களுக்கு இலவச அனுமதி கிடையாது என்ற வரி சேர்க்கப்பட்டதாம்.
இலவச விளம்பரம் என்பது தெரிந்தவர்களுக்கு பாஸ் கொடுப்பார்களாம். இது ஓசியில் படம் பார்ப்பது. இதற்கு தமாசா வரி கிடையாது. இலவச பாஸ் கிடையாது என்றதும் ரசிகர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. 1980 வரை இந்த நடைமுறை இருந்து வந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது.
எப்போது திரையரங்கு பக்கம் போனாலும் ஹவுஸ்புல் தான். 30வது நாளிலும் தீபாவளி கொண்டாட்டமாகத் தான் இருந்ததாம். மதுரை நியூசினிமாவில் தான் இத்தனை அலப்பறைகளும் நடந்தன.
32 நாள்களில் நடைபெற்ற 106 காட்சிகளும் ஹவுஸ்புல். நெல்லை, குமரி மாவட்டங்களில் பிரமாதமாகப் போனது. 51வது நாளும் ஹவுஸ்புல் தான். அதன் பிறகு 100 நாள்கள் ஓடியது. மதுரையில் 103 நாள்களில் நியூசினிமாவில் 3லட்சத்து 33 ஆயிரம் வசூல். 1975ல் இலங்கையிலும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் 101 நாள்கள் ஓடியதாம். அங்கு இந்தப் படத்தின் ஓபனிங் காட்சி நள்ளிரவு 1.30க்கு திரையிடப்பட்டதாம். 1978ல் 2வது ரிலீஸிலும் 42 நாள்கள் ஓடி அசத்தியதாம்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வி.பி.ராஜேந்திர பிரசாத். அவர் சிவாஜியை வைத்து 3 படங்கள் தயாரித்தார். எங்கள் தங்க ராஜா, உத்தமன், பட்டாக்கத்தி பைரவன். இவை அனைத்துமே இலங்கையில் மாபெரும் வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் சிவாஜி டாக்டராகவும், ரவுடியாகவும் வந்து கலக்கியிருப்பார். 1973ல் கே.வி.மகாதேவன் இசையில், வி.பி.ராஜேந்திரபிரசாத் தயாரித்து இயக்கிய படம் எங்கள் தங்க ராஜா. இந்தப் படத்தில் சிவாஜியுடன் மஞ்சுளா, சௌகார் ஜானகி, சிஐடி சகுந்தலா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இரவுக்கும் பகலுக்கும், கல்யாண ஆசைவந்த, கற்பா மானமா, இறைவா இறைவா, முத்தங்கள் நூறு உள்பட பல பாடல்கள் படத்தை மேலும் ரசிக்க வைத்தன. இந்தப் படம் திரையிட்ட இடம் எங்கும் அப்போது திருவிழாக்கோலம் தான்.