தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் மக்களை வெகுவாக கவர்ந்த ரியாலிட்டி ஷோவை எடுத்துக் கொண்டால் நிச்சயம் அதில் முதல் நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தைரியமாக சொல்லிவிடலாம்.
குக் வித் கோமாளி ஷோ உருவாவதற்கு முன்பாக ஏராளமான சமையல் தொடர்பான நிகழ்ச்சிகள் தமிழ் தொலைக்காட்சியில் இருந்திருந்தாலும், அனைத்தையும் விட ஒரு புதிய பரிமாணத்தை காட்டியிருந்தது குக் வித் கோமாளி. மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் பலரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க அவர்களுக்கு துணையாக கோமாளிகள் என்ற பெயரில் காமெடி செய்யும் கலாட்டா நபர்களும் களமிறங்குவார்கள்.
சமையல் தெரிந்த பிரபலமும், சமையல் தெரியாத கோமாளியும் என இரண்டு பேருமே செய்யும் மிகப்பெரிய காமெடி அலப்பறை தான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதுவரை நடந்து முடிந்த நாலு சீசன்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்த சீசன்களின் அறிவிப்பை பற்றி தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வந்தனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் ஆரம்பமாகி இருந்தது. செஃப் தாமு வழக்கம்போல இதில் நடுவராக கலந்து கொள்ள, மற்றொரு நடுவரான வெங்கடேஷ் பட் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார்.
மேலும் அவருக்கு பதிலாக மற்றொரு பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், நடுவராக அறிமுகமாகியுள்ளார். மேலும் ஏற்கனவே கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, சரத், குரேஷி உள்ளிட்டோருடன் இந்த முறை புதிதாக ராமர், நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட சிலரும் களமிறங்கி இருந்தனர்.
இந்த சீசனின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்த நிலையில் அடுத்தடுத்து எபிசோடுகளில் புதிய டாஸ்க்குகளை பார்க்கவும், யார் சிறப்பாக சமைப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலும் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது.
அப்படி ஒரு சூழலில் தான் முதல்முறையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி இருந்த நாஞ்சில் விஜயன் திடீரென ஒன்றிரண்டு எபிசோடுகளிலேயே தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நாஞ்சில் விஜயன், “நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுகிறேன்.
எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதன்பிறகு பாக்ஸ் ஆபிஸ் கம்பெனி தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் தோன்ற மாட்டேன். எனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி” என நாஞ்சில் விஜயன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வெங்கடேஷ் பட் உள்ளிட்ட சிலர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலக, தற்போது தொடர் ஆரம்பமான பின்னர், நாஞ்சில் விஜயனும் விலகி உள்ளது இந்த ஷோவை சுற்றி பரபரப்பை கிளப்பி உள்ளது.