தற்போது இளையராஜா-வைரமுத்து சர்ச்சை தமிழ் சினிமா உலகத்தையும், சோஷியல் மீடியாக்களையும் சூடேற்றி வரும் வேளையில் ஏ.ஆர். ரஹ்மான் பாட்டுக்கு மெட்டு அடிப்படையில் வைரமுத்துவின் அழகிய வரிகளுக்கு, அற்புதமான மெலடியைக் கொடுத்து அசத்தி ஹிட் கொடுத்திருக்கிறார். நிழல்கள் படம் மூலம் இளையராஜாவின் இசையில் பொன்மாலைப் பொழுது பாடலின் மூலம் அறிமுகமான கவிஞர் வைரமுத்து ஏராளமான கவிதைகளை எழுதி அதனைக் கவிதைத் தொகுப்புகளாகவும் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கவிதைத் தொகுப்பில் இருந்த பல கவிதைகள் பாடல்களாக உருப்பெற்றிருக்கின்றன. இவ்வாறு வைரமுத்து காதலைப் பற்றியும், காதலன் காதலியின் வர்ணனை பற்றியும் கவிதை ஒன்றைப் புனைந்து வைத்திருக்கிறார். இந்தக்கவிதையை எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், ஹம்சலேகா, ஷாம் போன்ற பிரபல இசையமைப்பாளர்களிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் யாருமே இந்தக் கவிதையை பாடலாக உருவாக்கவில்லை.
இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படம் மூலம் இசைப்புயலாக உருவெடுக்க, தொடர்ந்து புதிய முகம் பட வாய்ப்பு வந்தது. 1993-ல் சுரேஷ் மேனன் இயக்கத்தில் புதிய முகம் படத்தில் இசைக் கோர்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சமயம் ஏற்கனவே சில பாடல்களை வைரமுத்து எழுதிய நிலையில் திடீரென சுரேஷ்மேனனிடமிருந்து ஓர் அவசர அழைப்பு.. அவர் வைரமுத்துவிடம் உடனடியாக ஒரு பாடல் வேண்டும் என்று கேட்க, வைரமுத்துக்கு தான் 12 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்த அந்தக் கவிதையை எடுத்துக் கொடுக்கிறார்.
அந்தக் கவிதைதான் “கண்ணுக்கு மை அழகு, கவிதைக்குப் பொய் அழகு.. அவரைக்குப் பூ அழகு.. அவருக்கு நான் அழகு..” என்ற பாடலாக உருவானது. இன்றும் ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த மெலடிகளில் கண்ணுக்கு மை அழகு பாடல் தனிச்சிறப்பு வாய்ந்தது. மேலும் வைரமுத்துவின் வரிகள் எழுதிய பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் 10 நிமிடத்தில் மெட்டுப் போட்ட பாடல் இதுவேயாகும்.
படத்தில் இருமுறை வரும் இந்தப் பாடல் பி.சுசீலாவின் குரலில் ஒருமுறையும், உன்னிமேனன் குரலில் ஒருமுறையும் இடம்பெறும். இந்தப் பாடலின் தாக்கம் இன்றும் காதலர்களை விட்டு வைக்கவில்லை. அற்புதமான வரிகளுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் உணர்வுப் பூர்வமான ஓர் இசையைக் கொடுத்திருப்பார்.