இப்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரண்டு விஷயங்களை பற்றி முக்கியமாக பேசி வருகின்றனர். ஒன்று டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது பற்றியது. இன்னொன்று லக்னோவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங்.
முன்னதாக உலக கோப்பை அணியில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஆனால் அதே வேலையில் கே.எல் ராகுல், ரிங்கு சிங் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறாமல் போவது அதிக கேள்விகளை எழுப்பி உள்ளது.
இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதி வரும் ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. 27 ரன்கள் சேர்ப்பதற்குள்ளாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய வீரர்கள் அவுட்டாகினர்.
இதன் பின்னர் வந்த இஷான் கிஷன் மற்றும் நேஹால் வதேரா நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்ததால் தான் அவர்கள் 120 ரன்களையும் தாண்டி இருந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 18 பந்துகளில் மூன்று ஃபோர்கள் மற்றும் ஒரு சிக்ருடன் 35 ரன்கள் எடுத்தார்.
இதனால் அவர்களும் 144 ரன்கள் எடுக்க மற்றொரு முக்கியமான விஷயம் மும்பை ரசிகர்களை கடும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்பட்ட ரோஹித் சர்மா, இந்த சீசனில் சிறப்பாக பேட்டிங்கில் கவனம் செலுத்தி அதிக ரன்கள் குவித்த வீரராக மாறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவரோ ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி ரன் எடுக்க, கடந்த சில போட்டிகளாகவே குறைந்த ரன் எடுத்து அவுட்டாகி வருகிறார். இதுவரை 10 போட்டிகள் ஆடியுள்ள ரோஹித் ஷர்மா, 315 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில் டாப் 5 லிஸ்டில் இருக்க வேண்டியவர் தற்போது 15 வது இடத்தில் இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதனிடையே, தனது பிறந்த நாள் தினத்தில் லக்னோ அணிக்கு எதிராக 4 ரன்களில் அவுட்டானார். அப்படி இருக்கையில் பிறந்தநாள் தினத்தில் இவர் ஐபிஎல் போட்டிகளில் அடித்த ரன்கள் மற்றும் அதிலுள்ள ஒற்றுமையை பற்றி தற்போது பார்க்கலாம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், 1(5) ரன் எடுத்திருந்தார் ரோஹித். இதே போல, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் முறையே 2(5) மற்றும் 3(5) ரன்களை ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் தற்போது லக்னோ அணிக்கு எதிராக 4(5) ரன்களையும் எடுத்துள்ளார். இப்படி வரிசையாக, கடந்த நான்கு பிறந்தநாளில் நடந்த ஐபிஎல் போட்டியில் வரிசையாக 1 முதல் 4 ரன்களை எடுத்துள்ளார். இதனால், அடுத்த சீசனில் தனது பிறந்தநாளில் போட்டி நடந்தால் 5 பந்துகளில் 5 ரன்கள் எடுப்பார் என்றும் ரசிகர்கள் வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர்.