என்னுடைய பெயரை என் அப்பா பொக்கிஷமாக வைத்திருந்தார்… சுந்தர்.C எமோஷனல்…

By Meena

Published:

இயக்குனரும், நடிகருமான சுந்தர். C ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர். மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்த இவர் ‘முறை மாமன்’ என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். கார்த்திக் நடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’, ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’, கமலஹாசன் நடித்த ‘அன்பே சிவம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சுந்தர். C என்பது குறிப்பிடத்தக்கது.

90களின் பிரபலமான நடிகையான குஷ்பூவை மணந்துக் கொண்டார். 2006 ஆம் ஆண்டு ‘தலைநகரம்’ திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘வீராப்பு’, ‘சண்டை’, ‘ஐந்தாம் படை’ போன்ற திரைப்படங்களில் நடிகராக நடித்தார்.

2014 ஆம் ஆண்டு இவர் இயக்கி இவரது மனைவி குஷ்பூ தயாரிப்பில் வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் சுந்தர். C அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 2, 3, பாகங்களை இயக்கினார். தற்போது அரண்மனை 4 ஆம் பாகம் தயாராகி விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்ட சுந்தர். C, தனது அப்பாவைப் பற்றி எமோஷனலாக பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், எனது அப்பா மிலிட்டரியில் பணிபுரிந்தவர். அதனால் அவர் மேல் பயம் கலந்த மரியாதையுடன் இரண்டு அடி தள்ளியே இருப்போம். அவருடன் அவ்வளவு நெருக்கமாக பேசியது கிடையாது.

நான் டைரக்டர் ஆன பின்பு நியூஸ்பேப்பரில் டைரக்டர் சுந்தர். C என்று பெயர் போட்டிருந்ததை கட் பண்ணி எடுத்து அவரது பீரோவில் பொக்கிஷம் போல வைத்திருந்தார். அவர் இறந்த பிறகு அவர் பீரோவை திறந்து பார்க்கும் போது எனக்கு அது கிடைச்சது. அதுதான் என் வாழ்க்கையில் மிகவும் எமோஷனலான விஷயம் என்று பகிர்ந்துள்ளார் இயக்குனர் சுந்தர். C.