தமிழ்நாட்டில் ஏலகிரி என்பது ஏலக்காய் தோட்டத்திற்கு பெயர் பெற்ற மலைவாசஸ்தலம் ஆகும். இது திருப்பத்தூரில் அமைந்துள்ளது, இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், புகழ்பெற்ற ஆனைமலை மலைகளின் கிளையாகவும் உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஜமீன்தார் குடும்பத்தின் தனிச் சொத்தாக இருந்த ஏலகிரி, 1950களில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. தற்போது ரெட்டியூரில் அமைந்துள்ள ஜமீன்தார் குடியிருப்புக்கு சுற்றுலாப் பயணிகள் இன்றும் சென்று பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் பழங்குடியினரின் தனித்துவமான அரிய பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் கட்டிடக்கலை ஆகியவை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஏலகிரி நோக்கி ஈர்க்கின்றன.
ஏலகிரி ரோஜா தோட்டங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பல்வேறு மலர்களின் வாசனையை சுமந்து செல்லும் காற்று ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. வாணியம்பாடி-திருப்பதி வழித்தடத்தில் இந்த இடத்தைக் காணலாம். இந்த மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 1410 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த இடத்தின் முக்கிய ஈர்ப்பு 14 குக்கிராமங்கள் மற்றும் மலைகளில் பரவியிருக்கும் ஏராளமான கோயில்கள் ஆகும். கூடுதலாக ஏலகிரியில் மலையேற்றம், பாராகிளைடிங், பாறை ஏறுதல் போன்ற சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கேற்ப வேடிக்கையான பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வழங்குகிறது.
இங்கு உள்ள அழகிய காட்சிகளில் ஒன்று சுமார் 4338 அடி உயரத்தில் அமைந்துள்ள சுவாமிமலை ஆகும். இது ஏலகிரியின் மிக உயரமான இடமாகும். மலையேற்றப் பயணிகளுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாகும். அங்கிருக்கும் ஜலகம்பரா நீர்வீழ்ச்சி குடும்பத்துடன் செல்பவர்கள் பார்க்க வேண்டிய ஒன்றாகும். பாறைகளுக்கு இடையே பனி மூடிய நீர்வீழ்ச்சியின் காட்சி ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும். இங்குள்ள தண்ணீருக்கு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.
புங்கனூர் ஏரியை ஒட்டிய 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இயற்கை பூங்கா, இந்த இடத்தின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் ஆகும். இந்த பூங்கா பல்வேறு மற்றும் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாகும். இந்த இயற்கை பூங்காவில் பல வண்ண விளக்குகள் கொண்ட இசை நீரூற்று, மீன் அகுவாரியம் , செயற்கை நீர்வீழ்ச்சி, குழந்தைகள் பூங்கா, மூங்கில் வீடு மற்றும் அழகான தோட்டங்கள் உள்ளன. இன்னொரு ஏரியான நிலாவூர் ஏரியில் போட்டிங் செய்யும் வசதியும் இருக்கிறது.
நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஏலகிரியில் உச்சகட்ட சீசனாக இருக்கும் மற்றும் மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மிதமான சீசனாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில், ஏலகிரி கோடை விழா சுற்றுலாப் பயணிகளுக்காக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளின் ஸ்டால்கள், மலர் கண்காட்சிகள், படகு இல்லங்கள், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு வகையான நாய்களின் கண்காட்சிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வர்.