மீம்ஸ்களின் அரசன் என்றால் அது நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலு தான். இவர் புகைப்படத்துடன் தான் பெரும்பாலான மீம்ஸ்கள் வரும். இவர் படத்தில் நடித்த ஒவ்வொரு கெட்டப் மற்றும் முகபாவனைகளை மீம்ஸ்களில் இணைத்திருப்பர். அதேபோல் இவரது முகபாவனைகள் கச்சிதமாக மீம்ஸ்களுக்கு பொருந்தும்.
குமாரவடிவேல் நடராஜன் என்ற இயற்பெயர் கொண்டு மதுரையில் பிறந்தவர் வடிவேலு. இவருக்கு ‘வைகை புயல்’ என்ற புனைப்பெயரும் உண்டு. 1988 ஆம் ஆண்டு டி. ராஜேந்தர் நடித்த ‘என் தங்கை கல்யாணி’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர்.
பிறகு நடிகர் ராஜ்கிரணை சந்தித்து வாய்ப்பு கேட்டார் வடிவேலு. அவர் தான் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். பின்னர் நடிகர் விஜயகாந்த் அவர்களை சந்தித்தார் வடிவேலு. நடிகர் விஜயகாந்த் அவர்களும் வடிவேலுவை ஆதரித்து ‘சின்ன கவுண்டர்’ திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.
பிறகு 90 களில் கவுண்டமணி- செந்தில் அவர்களுடன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடித்தார் வடிவேலு. 1994 இல் பிரபுதேவா நடித்து வெளியான ‘காதலன்’ திரைப்படத்தில் தான் வடிவேலு முதல்முறையாக தனி நகைச்சுவை நடிகராக நடித்தார். 2006 ஆம் ஆண்டு ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ என்ற நகைச்சுவை கலந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து நல்ல விமர்சனங்களைப் பெற்றார். இப்படி சிறிது சிறிதாக அடியெடுத்து வைத்து தனது முயற்சி மற்றும் உழைப்பினால் தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற அசைக்க முடியாத இடத்தைப் பெற்றார்.
இப்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் வடிவேலு. நேற்றைய தினம் வாக்களித்து விட்டு பத்திரிகையாளர்களிடம் பேசினார் வடிவேலு. அவர் கூறியது என்னவென்றால், இப்போதெல்லாம் மக்களை ஏமாற்ற முடியாது, மக்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க. நல்ல ஆட்சியை தான் தேர்ந்தெடுப்பாங்க, கண்டிப்பா மாற்றம் நிகழும்னு நம்புவோம் என்று கூறியுள்ளார் வைகை புயல் வடிவேலு.