சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று நடிகரானவர்களில் ஒருவர் தான் ரியோ ராஜ். விஜய் டிவியில் 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்- கல்லூரி சாலை’ தொடரில் நடித்ததன் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் சன் மியூசிக்கில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றினார்.
அதற்கு பின்னர் 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். நகைச்சுவை திரைப்படமான இது நல்ல விமர்சனங்களைப் பெற்றது. பின்னர் விஜய் டிவி நடத்திய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானார்.
கடந்த 2023 ஆண்டு ரியோ கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘ஜோ’. இந்த திரைப்படம் வெற்றி பெற்று மக்கள் மனதிலும் இடம் பிடித்தது. இந்த படத்தின் ‘உருகி உருகி’ என்ற பாடல் மெகாஹிட் ஆனது. தற்போது நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரியோ ‘ஜோ’ படத்தின் வெற்றியை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், ‘ஜோ’ படத்தின் வெற்றிக்கு VJ சித்து முக்கியமான காரணம். அவர் செய்த வீடியோ தான் ஜோ திரைப்படத்தை பலரிடம் கொண்டு சேர்த்தது. நானும் சித்துவும் ஒன்றாக தான் வாய்ப்பு தேடினோம். நண்பனாக மக்களிடம் இருந்து அவனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் நடிப்பை பொறுத்தவரை என்னோட மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் நடிகர் தனுஷ் அவர்கள்தான் என்று ரியோ பகிர்ந்துள்ளார்.