இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பமான ஐபிஎல் தொடரில் இதுவரை 16 சீசன்கள் நடந்து முடிந்து விட்டது. இந்த 16 சீசன்களில் ஏறக்குறைய 750 ஐபிஎல் போட்டிகளுக்கு மேல் நடந்துள்ள நிலையில், பல சாதனைகளும், சிக்ஸர்களும், ஃபோர்களும், விக்கெட்டுகளும் என ஏராளமான நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஆனால் ஏறக்குறைய ஆயிரம் ஐபிஎல் போட்டிகளில் நடைபெறாத ஒரு சம்பவம் நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்றே போட்டிகளில் நிகழ்ந்து பலரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளது.
சமீபத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், தங்களின் வெற்றிக்காக பலப்பரீட்சை நடத்தி இருந்தது. இந்த மோதலில் இரண்டு அணிகளுமாக சேர்த்து மொத்தம் 549 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதிகமான பவுண்டரிகளும் இந்த போட்டியில் சென்றிருந்தது.
அது மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் அதிபட்ச ஸ்கோர், சேசிங் செய்யும் போது அதிகபட்ச ஸ்கோர் என பல அரிதான நிகழ்வுகளும் இந்த போட்டியில் அரங்கேறி இருந்த நிலையில், பந்து வீச்சாளர்களுக்கு இடமே கொடுக்காமல் பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம் தான் இந்த போட்டி முழுக்க நிறைந்திருந்தது.
ரசிகர்களுக்கும் ஒரு ஃபுல் மீல்ஸாக அமைந்திருந்த நிலையில் இந்த போட்டி முடிவடைந்ததும் தான் ஒரு முக்கியமான சாதனை ஐபிஎல் வரலாற்றிலேயே நிகழ்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வரை மொத்தம் 2 அணிகள் தான் 250 க்கு அதிகமான ரன்களை அடித்திருந்தது. 2013 ஆம் ஆண்டு ஆர்சிபி அணி புனே அணிக்கு எதிராக 263 ரன்களும், கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக லக்னோ அணி 257 ரன்களும் எடுத்திருந்தது.
இது தவிர எந்த அணிகளும் 250 ரன்களை ஐபிஎல் போட்டியில் தாண்டாத நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் நான்கு முறை 250க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் அடித்துள்ளது.
இதில் ஹைதராபாத் அணி இரண்டு முறை 287 மற்றும் 277 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி 272 ரன்களும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 262 ரன்களும் எடுத்துள்ளது. 16 ஐபிஎல் சீசனிலேயே இரண்டு முறை தான் 250 ரன்களை அணிகள் கடந்துள்ள நிலையில் தற்போது ஒரே சீசனில் 30 போட்டிகள் நடந்து முடிந்த சூழலில், நான்கு முறை 250-க்கும் அதிகமான ரன்களை அணிகள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

