தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒரு இயக்குனர் இரண்டு முதல் மூன்று படங்களை இயக்கி இருந்தாலும் அவை அனைத்தையும் ஹிட்டாக கொடுப்பதே மிக அரிதான நிகழ்வாக சமீபத்திய தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறது. முதல் சினிமா பெரிய ஹிட் ஆகும் சமயத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது படத்தில் ஏதாவது ஒரு தவறின் மூலம் இயக்குனர்களின் படங்கள் அதிக விமர்சனத்தையும் சந்திக்கும்.
அப்படி இருக்கையில் தான் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் இதுவரை ஆறு படங்களை இயக்கி அவை அனைத்தும் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை தனது இயக்கத்தில் தோல்வியே சந்திக்காத வெற்றிமாறன் அடுத்ததாக விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்து விட்டு, வாடிவாசல் படத்தையும் இயக்க உள்ளார்.
இதில் விடுதலை 2 திரைப்படத்தில் மஞ்சுவாரியர், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் ஏற்கனவே நிறைய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல தரப்பிலான பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இப்படி தமிழ் சினிமாவில் இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படம் வரும் போது இருக்கும் எதிர்பார்ப்பு வேறு எந்த இயக்குனருக்கும் இல்லை என்றே சொல்லலாம்.
மேலும் ரசிகர்களை ஏமாற்றாத அளவுக்கு வெற்றி படத்தை கொடுத்து வரும் வெற்றிமாறன் ஆடுகளம் திரைப்படத்தின் டைட்டில் வைப்பது பற்றி நடந்த சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இது பற்றி வெற்றிமாறன் பேசுகையில், “ஆடுகளம் படத்திற்கு முதலில் சண்டக்கோழி என்ற டைட்டிலை தான் யோசித்தது வைத்திருந்தோம். ஆனால், நாங்கள் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த டைட்டிலை வாங்கி விட்டார்கள். அதன் பின்னர், சேவல் என்ற டைட்டிலை முடிவு செய்தோம். இதனை பதிவு செய்வதற்காக போனால் இயக்குனர் ஹரி அவர்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்துக் கொண்டதை அறிந்தோம்.
இருந்தாலும் ஒரு முறை ஹரி சாரிடம் கேட்டு பார்க்கலாம் என நினைத்தோம். நான் கால் செய்து கேட்ட போது அவர் என்னிடம், ‘கோவிலில் வைத்து இந்த டைட்டிலை பூஜை செய்து விட்டோம். இல்லை என்றால் நிச்சயம் இந்த டைட்டிலை நான் கொடுத்திருப்பேன். 3 நாட்களுக்கு முன்பாக தான் செய்தேன். இல்லையென்றால் கொடுத்திருப்பேன்’ என கூறினார்.
அதன் பின்னர், என்ன டைட்டில் வைக்கலாம் என பேசிய போது கதை நடக்கிற களம் என பேசி, ஆடுகளம் என முடிவு செய்தோம். சண்டக்கோழி, சேவலை விட ஆடுகளம் என்ற டைட்டில் தனுஷிற்கு பிடித்திருந்தது. அப்படி தான் ஆடுகளம் உருவானது” என வெற்றிமாறன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.