‘மைக் மோகன்’ என்ற பெயரைக் கொண்ட நடிகர் மோகன் 1977 ஆம் ஆண்டு ‘கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மைக்ரோபோன்களை பயன்படுத்தி பாடகராக பல படங்களில் நடித்ததால் இவரை ‘மைக் மோகன்’ என்று மக்கள் அழைத்தனர். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடா போன்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
1980 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகர் மோகன். இவரது படங்கள் 200 நாட்கள் மேல் ஓடி வசூலிக்கும். அதனால் தமிழ் சினிமாவின் ராஜேந்திர குமார் என்று அழைக்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டு ‘பயணங்கள் முடித்தவதில்லை’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார்.
1986 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘மௌன ராகம்’ திரைப்படம் நடிகர் மோகனுக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். அத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று இன்றளவும் எவெர்க்ரீன் படமாக வலம் வருகிறது. அந்த படத்தின் பாடல்களும் மெகாஹிட் ஆனது. பிறகு முன்னணி நடிகர்களுள் ஒருவரானார் நடிகர் மோகன்.
1990களின் பிற்பகுதியில் நடிகர் மோகனுக்கு எந்தப் படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. பின்னர் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரிப்பதில் பிஸியாகி விட்டார். தற்போது மிகப்பெரிய நீண்ட இடைவேளைக்குப் பின்பு ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் மோகன்.
அந்த திரைப்படத்தின் விழாவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் மோகன் பதிலளித்தார். அதில் ஒருவர், பாடலுக்கு வாய் அசைப்பதில் நடிகர் சிவாஜிக்கு அடுத்ததாக கச்சிதமாக செய்பவர் நீங்கள் தான். அந்த பெர்பெக்ஷனை எப்படி கொண்டு வந்தீர்கள் என்ற கேள்விக்கு, நடிகர் மோகன், SPB சார் பாடலை கேட்கும் போதே உணர்ச்சிகள் தானாக வந்துவிடும். பாடலின் அர்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு அப்படியே நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.