நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு நடுவே தான் நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைவதாக திடீரென அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கோட் தவிர இன்னொரு படத்துடன் தனது திரைப் பயணத்தையும் நிறுத்திக் கொள்ளப் போவதாகவும் விஜய் தெரிவித்திருந்தது ரசிகர்களை கடும் வருத்தத்தில் ஆழ்த்தி இருந்தது.
இதனால் கோட் மற்றும் விஜய்யின் அடுத்த படம் பற்றிய எந்தவித அறிவிப்பு வந்தாலும் அதனை பெரிதாக கொண்டாட வேண்டும் என்ற ரசிகர்கள் கங்கணம் கட்டி இருக்கும் சூழலில் கோட் படத்தின் சில அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. முதலில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன்படி கோட் திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்ததாக கோட் படத்தின் சிங்கிள் குறித்த அறிவிப்பும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வர, தற்போது இந்த பாடலும் வெளியாகி உள்ளது.
விசில் போடு என இந்த பாடல் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி வரிகளை எழுத விஜய் பாடியுள்ளார். மேலும் இதன் லிரிக்ஸ் வீடியோவில் பல அசத்தலான விஷயங்களும் அமைந்துள்ளது. நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோரும் விஜய்யுடன் இணைந்து நடனமாடும் வீடியோ காட்சிகள் ரசிகர்களை வைப் ஏற்றியுள்ளது.
அப்படி ஒரு சூழலில் தான் அஜித் மற்றும் சூர்யா படத்தில் ரிஃபரென்ஸ் கூட இந்த பாடலில் இருந்ததும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வெங்கட் பிரபு கோட் படத்துக்கு முன்பாக இயக்கிய அனைத்து திரைப்படங்களின் ரிஃபரன்ஸ் காட்சிகளும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது. சென்னை 28 படத்தில் வரும் பேட், சரோஜா படத்தில் வரும் வேன், அஜித்தின் மங்காத்தா படத்தில் வரும் செஸ் போர்டு, சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் வரும் கூலிங் கிளாஸ் உள்ளிட்ட வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான அனைத்து திரைப்படங்களின் ரிஃபரென்ஸ்களும் இந்த ஒரே பாடலில் வெளியாகி உள்ளது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்துள்ளது.
மேலும் இந்த பாடலின் இன்னொரு சிறப்பம்சமாக நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைந்தது தொடர்பாக அவரது கட்சியை குறித்தும் வரிகள் இடம்பெற்றுள்ளது. உதாரணத்திற்கு, “உன் பார்ட்டிக்கு தான் எங்க வாக்கு”, “பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா”, “கேம்பைன தான் தொறக்கட்டுமா…மைக்க எடுக்கட்டுமா” என விஐய்யின் அரசியல் என்ட்ரி குறித்த வரிகள் என விசில் போடு பாடலின் சிறப்பம்சங்கள் பல ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.