உலகநாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவில் செய்த சாதனைகளும், பங்களிப்பும் ஏராளம். தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக ஏதாவது செய்து ரசிகர்களைக் கவர்வதில் கைதேர்ந்த வித்தைக்காரர். அதே போல் அவர் படங்களில் வரும் வசனங்கள் ஓரளவிற்கு சமூக புரிதல் உள்ளவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும்படி அமைந்திருக்கும். இதற்கு உதாரணமாக பல படங்களைச் சொல்லலாம். கே. பாலசந்தர் பட்டறையில் கூர்தீட்டப்பட்ட வைரமாக ஜொலித்து இன்று இந்திய சினிமாவின் பொக்கிஷமாகத் திகழ்கிறார்.
இவ்வாறு வசனங்களில் தனித்துவம் காட்டும் கமல்ஹாசனின் அற்புத படைப்புகளில் 10 வேடங்களில் உருவான படம் தான் தசாவதாரம். தசாவதாரம் படத்தில் இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத 10 வேடங்களில் நடித்து உலக சினிமாவையே மிரள வைத்தார். தசாவதாரம் எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே அளவிற்கு இந்தப்படத்தில் உள்ள கருத்துக்களும் பேசப்பட்டது. அதில் ஒரு குறிப்பிடத்தகுந்த வசனம்தான் ‘கடவுள் இல்லனு சொல்லல.. இருந்தா நல்ல இருக்கும்னு சொல்றேன்..’ என்று அசினிடம் பெருமாள் சிலையை வைத்துக் கொண்டு கூறுவார். ஆத்திகரான கமல்ஹாசன் இந்தப்படத்தில் வைணவ மதத்தை தழுவுவது போல் நடித்திருப்பார்.
இளையராஜாவின் போட்ட டியூனை விரும்பாத ரஜினி.. வீரா படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு!
இந்த வசனமானது மிக பிரபலம் அடைந்தது. இந்த வசனத்தை கமலுக்கு முதன் முதலில் சொல்லியவர் யார் தெரியுமா? பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் தான். இவர் ஒரு முறை தனது நண்பருடன் மதுரை டவுன்ஹால் பகுதியில் தனது நண்பருடன் கோவிலுக்குச் சென்றாராம். அவரது நண்பர் புத்தக பிரியர். அப்போது கு. ஞானசம்பந்தமும் நண்பரும் பேசும் பொழுது கடவுளைப் பற்றிய பேச்சு வந்திருக்கிறது. அவரது நண்பர் முருகன் சிலையை அது இருக்கும் அமைப்பை பார்த்து அது நாயக்கர் காலமா, சோழர் காலமா என்று விவாதிக்க, கு. ஞானசம்பந்தமோ சாமியை கும்பிடலாமே இப்போ இந்த ஆராய்ச்சி வேண்டாமே என்று கூறியிருக்கிறார். மேலும் அந்த நண்பர் அவரிடம் ‘கடவுள் இல்லனு சொல்லல..ஆனா இருந்திருந்தா நல்லாருக்கும்..’ என்று கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்தை கு. ஞானசம்பந்தம் கமல்ஹாசனிடம் கூற அவரோ அதை தசாவதாரத்தில் வசனமாக வைத்து உலகம் முழுவதும் பிரபலமாக்கி விட்டார்.