40 வயதில் சினிமாவை விட்டு கிளம்ப நினைத்த ஏ.ஆர். ரஹ்மான்.. ரஜினியால் மாறிப் போன வாழ்க்கை.. காரணம் இதான்..

By Ajith V

Published:

ரோஜா என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே புரட்டி போட்டதுடன் யாருடா இந்த பையன் என பலரையும் தேட வைத்தவர் தான் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்தில் தேசிய விருதினையும் வென்று இருந்தார்.

அத்துடன் இளையராஜாவின் பொற்காலம் என தமிழ் சினிமா அறியப்பட்டு வந்த நிலையில் அதனை அப்படியே மாற்றி எழுதி ஏ. ஆர். ரஹ்மானின் காலம் என்று ஒன்று இருக்கும் என்பதற்கும் வித்திட்டவர். இளையராஜாவின் புகழ் காரணமாக பல இசையமைப்பாளர்களின் பெயர்கள் அந்த காலத்தில் தெரியாமல் இருந்த நிலையில் ரஹ்மான் சினிமாவுக்குள் என்ட்ரி ஒன்றை கொடுத்த பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறியதுடன் பல இசையமைப்பாளர்கள் புதிதாகவும் வரத் தொடங்கினர்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, ஏறக்குறைய 32 ஆண்டுகள் ஆன போதிலும் அவரது இசையில் தற்போது உருவாகி வரும் அனைத்து பாடல்களுமே அந்த அளவிற்கு சிறப்பாக தான் அமைந்து வருகிறது. தமிழில் தொடங்கி, ஹிந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் வரை சென்று ஆஸ்கர் விருதினையும் வென்றிருந்தார்.

மேலும் இவரது இசையில் சமீபத்தில் வெளியாகி இருந்த ஆடுஜீவிதம் என்ற மலையாளத் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, ரசிகர்கள் அனைவரையுமே மிரண்டு போக வைத்திருந்தது. இத்தனை ஆண்டுகளாக இசை துறையில் இருந்து வருவதுடன் தன்னுடைய இசையால் இன்று வரையில் பலரையும் கட்டிப் போட்டுவரும் ஏ. ஆர். ரஹ்மான், ரஜினிகாந்தை பார்த்து இன்ஸ்பியர் ஆன விஷயம் பற்றி சொன்ன கருத்து பலரையும் மனம் கவர்ந்து வருகிறது.

இது தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த ஏ. ஆர். ரஹ்மான், “11 வயதிலேயே நான் இசைத்துறைக்கு வந்து விட்டதால் 40 வயதுடன் இதிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் எந்திரன் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் ஆஃப் ஸ்கிரீனிலும், ஆன் ஸ்கிரீனிலும் செயல்படுவதை பார்த்ததும் என் மனது மாறிவிட்டது.

இனிமேலும் தொடர்ந்து இசையமைக்க வேண்டும் என நான் அப்போது தான் முடிவெடுத்தேன்” என தான் இசையமைப்பில் இருந்து விலகாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக, அப்படி ஒரு வயதிலும் ரஜினியின் எனர்ஜி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.