ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரபலமான நடிகை. சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்த போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு வெற்றிப் பெற்றார்.
இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கில் 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது தாத்தா அமர்நாத்தும் ஒரு தெலுங்கு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
2010 ஆம் ஆண்டு ‘நீதானா அவன் ‘ என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2012 ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ திரைப்படத்தில் துடுக்கான பெண்ணாக நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷிற்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் 2014 ஆம் ஆண்டு இவர் நடித்த ‘காக்கா முட்டை’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இவர் நடித்த படங்களில் பிரபலமானவை ‘நம்ம வீட்டு பிள்ளை’, .’தர்மதுரை’, ‘மனிதன்’, ‘ரம்மி’ போன்ற திரைப்படங்கள் ஆகும்.
தற்போது ஜி. வி. பிரகாஷுடன் இணைந்து ‘டியர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இப்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ‘டியர்’ திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் நேர்காணல்களை கொடுத்து வருகிறார். அதில் தன்னை பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதில் சில என்னவென்றால், எனக்கு ஒரு கதையை பிடித்துவிட்டது என்றால் அந்த டைரக்டரிடம் கையில் காபி வைத்துக் கொண்டு ஸ்க்ரிப்டைப் பற்றி டிஸ்கஸ் பண்ணுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எவ்வளவு மணி நேரம் ஆனாலும் ஸ்கிரிப்ட் பற்றி பேசி கொண்டே இருப்பேன். அதே போல் நான் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம் தான் அப்படிதான் சில விஷயங்களில் யோசிப்பேன், ரொம்ப மார்டன் ஆன பொண்ணுலாம் கிடையாது என்று கலகலப்பாக பேசியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.