சூப்பர் சிங்கர் என் அம்மாவோட கனவு மற்றும் கடைசி ஆசை… பாடகி புன்யா எமோஷனல்…

By Meena

Published:

விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் சிங்கர் சீசன் 7 இல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அறிமுக சுற்றிலேயே தனது அற்புதமான குரலால் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார். தனது தனித்துவமான குரலால் இறுதி 5 போட்டியாளர்களில் இடம் பெற்று ஃபினாலே சுற்று மேடையில் இடம்பிடித்தார். இவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது ரன்னர் அப் ஆக வந்தார்.

பாடகி புன்யா நெய்வேலியில் பிறந்து லண்டனில் வளர்ந்தவர் ஆவார். இவர் தொழில் ரீதியாக ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இசையின் மீது பாடகி புன்யாவிற்கு இருந்த அளவில்லா ஆர்வத்தால் அவர் சூப்பர் சிங்கரில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் கலந்து கொள்வதற்காகவே லண்டனில் இருந்து சென்னை வந்து தங்கி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு வெளிநாட்டு இசை நிகழ்ச்சியிலும், விஜய் டிவியில் அடுத்தடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் விருந்தினராக பங்கேற்று வந்தார். அதன் பிறகு இடைவேளை எடுத்துக் கொண்ட பாடகி புன்யா தற்போது பேட்டி அளித்துள்ளார். அதில் தனது சூப்பர் சிங்கர் அனுபவத்தையும் தனது அம்மாவை பற்றியும் எமோஷனலாக பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியது என்னவென்றால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு நான் லண்டனில் ஒரு மருத்துவராக பணிபுரிந்து வந்தேன். இசையின் மீது எனக்கு அதீத ஆர்வம் உண்டு. அந்த நேரத்தில் எனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது வாழ்க்கையே ஸ்ட்ரெஸ் ஆக மாறியது. எங்கள் வீட்டில் தொடர்ந்து சூப்பர் சிங்கர் பார்ப்போம். எனது அம்மாவிற்கு சூப்பர் சிங்கரில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களது கனவு. அம்மா என்னை கலந்துக்க சொன்னார். அதன்படி நான் ஆடிஷனில் கலந்து கொண்டு முன்னேறி இறுதிச் சுற்றுக்கும் வந்தேன்.

சூப்பர் சிங்கரில் நான் கலந்து கொண்டு நான் இறுதி மேடை வரை வந்தது எனது அம்மாவிற்கு அது கடைசி ஆசையாக மாறிவிடும்னு நான் நினைக்கலை. சூப்பர் சிங்கர் நடக்கும் பொழுது எனது அம்மாவிற்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. நான் நிகழ்ச்சி விட்டு லண்டன் வரேன்னு சொல்லும்போது, அம்மா இல்லை நீ இறுதி வரை வரவேண்டும் அதுதான் எனக்கு சந்தோசம் நீ சென்னைல இருந்து நிகழ்ச்சியில உன் முழு திறமையை காட்டுனு சொன்னாங்க. நான் சூப்பர் சிங்கர் முடிந்து லண்டன் திரும்பும் போது அம்மாவிற்கு புற்றுநோய் தீவிரமடைந்திருந்தது.

அதற்கு பிறகு இரண்டு மாதத்தில் அம்மா இறந்துவிட்டார். உடனே கோவிட் வந்துவிட்டது. அம்மாவின் இழப்பில் இருந்து வெளிவர கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. இப்போ எனது இசை பயணத்தை தொடர்வதற்காக இங்கு சென்னை வந்து செட்டில் ஆகி உள்ளேன். சினிமாவில் நிறைய பாடல்கள் பாட வேண்டும் என்பது தான் எனது லட்சியம் என்று கூறியுள்ளார் பாடகி புன்யா.