தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எக்கச்சக்க இந்திய மொழிகளில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் தான் சிங்கீதம் சீனிவாச ராவ். இவர் தமிழில் இயக்கிய பல படங்களில் கமல்ஹாசன் முன்னணி நாயகராக நடித்து அசத்தியுள்ளார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ், காதலா காதலா உள்ளிட்ட பல திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
சிங்கீதம் சீனிவாச ராவ் – கமல்ஹாசன் இணையும் திரைப்படம் என்றாலே அதில் கிரேசி மோகன் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். அப்படி இந்த மும்மூர்த்திகள் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் அபூர்வ சகோதரர்கள். நடிகர் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்த நிலையில், இவர்களுடன் ஜெய்சங்கர், நாகேஷ், கௌதமி, மனோரமா, ஸ்ரீவித்யா என பலரும் நடித்திருந்தனர்.
அதிலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் கலக்கிய நாகேஷ் இந்த திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். அதே போல அபூர்வ சகோதரர்கள் படத்தில் மிகவும் குள்ளமான அப்பு என்ற கதாபத்திரத்தில் சர்க்கஸ் கலைஞராக கமல் நடித்திருந்த ரகசியம் இன்று வரையிலும் பலருக்கு புரியாத புதிராகவே உள்ளது.
அப்படி இருக்கையில் அந்த குள்ளமாக வரும் அப்புவை பார்த்து நாகேஷ் டக்கென படப்பிடிப்பின் போது சொன்ன வார்த்தையை பற்றி கமல் தெரிவித்த தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த கமல்ஹாசன், “அபூர்வ சகோதரர்கள் படத்திற்காக வசனம் எழுதிய பின்னர் நானும் கிரேசி மோனும் பிரமாதமான ஒரு படம் தயார் செய்த திமிரில் இருந்தோம்.
அந்த சமயத்தில் நாகேஷ் அனைத்தையும் மாற்றி இருந்தார். ராஜா என நினைத்து அப்புவை இரண்டு பேர் தூக்கிக் கொண்டு நாகேஷ் முன்பு நிறுத்தும் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது குள்ளமாக இருக்கும் கமலை திரும்பி பார்த்த நாகேஷ், “பாக்கி எங்கடா?” என யாரும் எதிர்பாராத நேரத்தில் சொல்லியிருப்பார். அந்த வார்த்தையே டயலாக்கில் இல்லாத போது அவர் அப்படி சொல்வார் என நாங்களும் எதிர்பார்க்கவில்லை.
டேக்கில் அந்த வார்த்தையை அவர் சொன்னதுமே எங்களுக்கு பெரிய ஷாக்காக இருந்தது. எனக்கும் கிரேசி மோகனுக்கும் பல நாட்கள் நாங்கள் உட்கார்ந்து யோசித்து எழுதியதை ஒரே வார்த்தையில் அடித்து நொறுக்கி விட்டார் என்பது போன்ற அவமானமாக இருந்தது. நாகேஷ் கேள்விக்கு பதிலுக்கு அந்த இரண்டு பேர் எதையாவது சொல்ல வேண்டுமென்று யோசித்து தான் அவர்கள் இருவரும் ‘இவ்வளவுதாங்கய்யா கிடைச்சுது’ என்று கூறுவது போன்ற வசனத்தை நாங்கள் உருவாக்கினோம்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.