இம்பேக்ட் பிளேயர் விதி வந்த பிறகு.. எந்த அணியும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கும் சிஎஸ்கே..

By Ajith V

Published:

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக ஒரு விதி அமலில் இருந்து வருகிறது. அதாவது இம்பாக்ட் பிளேயர் என்ற விதி தான் அது. இதன் படி பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர்கள் தான் போட்டி முழுக்க ஆட வேண்டும் என்ற நிலை இல்லாமல் இந்த விதியின்படி போட்டிக்கு நடுவே சப்ஸ்டியூட் ஆக ஒரு வீரர் எப்போது வேண்டுமானாலும் களமிறங்கிக் கொள்ளலாம்.

இதற்காக ஆடும் லெவனைத் தாண்டி ஐந்து வீரர்கள் பட்டியல் இடம்பெறும் நிலையில் இதிலிருந்து ஒரு வீரர் போட்டிக்கு எப்போது தேவைப்படுவாரோ அப்போது இறங்கி தனது பணியையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். உதாரணத்திற்கு ஒரு அணியின் பந்துவீச்சு பலவீனம் அடையும் போது விதிப்படி அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு பந்துவீச்சாளர் உள்ளே வந்து விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்யலாம். இதே நிலைதான் பேட்டிங்கிற்கும்.

இந்த விதி ஒரு பக்கம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வந்தாலும் சிலர் கிரிக்கெட்டின் உண்மை தன்மையை குலைத்து விடுவதாக விமர்சனம் செய்தும் வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் தான் இம்பாக்ட் பிளேயர் விதி வந்த பின்னர் எந்த அணியும் செய்யாத ஒரு சரித்திர சம்பவத்தை செய்து வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

நடப்புத் தொடரில் தோனி கேப்டன் பதவியில் இருந்து மாறியிருந்த நிலையில் சிஎஸ்கே அணியை இளம் வீரர் ருத்துராஜ் கேப்டனாக இருந்து வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலும் மிக அச்சத்தலாக சிஎஸ்கே அணியினர் ஆடிவரும் நிலையில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

முஸ்தாபிசுர் ரஹ்மான், ருத்துராஜ், ரவீந்திரா, டேரில் மிட்செல், ரகானே, பதிரானா உள்ளிட்ட பலரும் இந்த தொடரில் நல்ல பங்களிப்பை அளித்து வருவதால் சிஎஸ்கே அணியும் அசைக்க முடியாத அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் அனைத்து விஷயங்களும் கைகூடாமல் போனதால் தோல்வியடையவும் நேரிட்டிருந்தது. இருந்தாலும் இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து தங்களின் வெற்றியை நிலை நாட்டுவதற்கான முயற்சிகளிலும் சிஎஸ்கே அணி முனைப்பு காட்டும் என தெரிகிறது.

மேலும் தங்களின் அடுத்த போட்டியில், நாளை (05.04.2024) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் சந்திக்க உள்ளது சிஎஸ்கே. இதனிடையே, கடந்த ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் என்ற விதி அமலானது. இந்த விதி வந்த பின்னர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள் இரண்டு முறை ஆல் அவுட்டாகி உள்ளது.

இதே போல, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள், ஒரு முறை ஆல் அவுட்டாகி உள்ளது. ஆனால், மற்ற 9 அணிகள் ஒரு முறையாவது ஆல் அவுட்டான நிலையில், சிஎஸ்கே அணியை யாராலும் ஆல் அவுட் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.