மக்கள் நாயகன்னு எல்லோராலும் போற்றப்பட்டவர், ரஜினி, கமல் நடித்த படங்களுக்கே டஃப் கொடுத்தவர் நடிகர் ராமராஜன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் சாமானியன் படத்தில் நடிக்கிறார். இசை அமைத்தவர் இளையராஜா. மதியழகன் தயாரிக்க, ஆர்.ராகேஷ் இயக்கியுள்ளார்.படத்தின்
இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ராமராஜன் இவ்வாறு பேசினார்.
2010ல் நடந்த விபத்தில் நான் மயிரிழையில் உயிர் பிழைத்தேன். அதிலிருந்து மீண்டு வந்து நான் இப்படி ஒரு படம் நடிப்பேனா என்பது பெரிய அதிசயம் தான் நடந்துள்ளது. இதற்கு காரணம் ரசிகர்களின் வேண்டுதல் தான். நான் எந்த ரசிகர் மன்றத்துக்கும் எதுவும் செய்யவில்லை. ஆனால் எனக்காக உயிரையேத் தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

திருச்செந்தூர் முருகன் அருளால் படம் சூப்பர்ஹிட் ஆகப்போகுது. இந்தப் படத்தில ராமராஜனப் போடலாம்னு சொன்னவர் அண்ணன் மதியழகன். டைரக்டர் என்றும் பொருந்துகிற மாதிரி நேற்று இன்று நாளைன்னு எடுத்துருக்காரு. இந்தப்படத்தை மிகப்பெரிய வெற்றி அடையச் செய்வார்கள் என் ரசிகர்கள். விளம்பரமே தேவையில்லை. ராமராஜன் படம்னா என் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்க்கத் தயாராக இருக்காங்க.
கதை, அருமையான திரைக்கதை. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு குடும்பத்தாரும் இதைக் கடக்காமல் போக முடியாது. அருமையான வசனம். படம் முடிந்து வரும்போது தாய்மார்கள் மட்டுமல்ல. ஆண்களும் ஃபீல் பண்ற அளவுக்கு அற்புதமான கதை. இதை ரிலீசுக்கு அப்புறம் சொல்லுங்க. 23 வருஷத்துக்கு அப்புறமும் இன்னைக்கு ராமராஜன்னு சொல்றாங்கன்னா அதுக்கு இளையராஜாவோட பாட்டுத் தான் என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.
ராஜா ராஜா தான் படத்துக்கு அசோசியேட் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். அப்பவே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வார். மதுரையில் 500 நாள் ஓடிய படம் கரகாட்டக்காரன். இந்தப் படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது 8 படம் ஹிட் கொடுத்தேன். இப்படி பெரிய ஹிட் கொடுக்கும் அளவு இசை அமைத்துக் கொடுத்தவர் இளையராஜா. இந்தப் படத்துல எனக்கு ஜோடி யாருன்னா எம்எஸ்.பாஸ்கர், ராதாரவி தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1999ல் அண்ணன் என்ற படத்தில் ராமராஜனுக்காக இசை அமைத்த இளையராஜா 25 வருடங்களுக்குப் பிறகு இப்போது கூட்டணி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


