மாடர்ன் ரகுவரன் டேனியல் பாலாஜி.. உலகை விட்டு மறைந்தாலும் உயிர்வாழும் நீங்கா படைப்புகள்!

By John A

Published:

1990 களில் வில்லன் நடிப்பு என்றாலே கூப்பிடுங்க ரகுவரனை என்று அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ஒரு மாடர்ன் வில்லனாக தனது மேனரிஸத்தில் கெத்து காட்டியவர் ரகுவரன். அவருக்குப் பின் அந்த இடத்தை நிரப்ப வந்தவர் அவரைப் போலவே 50 வயதுக்கு முன்னதாகேவே இவ்வுலகை விட்டுச் சென்று விட்டார். நடிகர் முரளியின் நெருங்கிய உறவினரான டேனியல் பாலாஜி சென்னையில் பிறந்து தரமணி திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பட்டம் படித்தவர்.

ஆரம்ப கால கட்டங்களில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். சித்தி சீரியல் இவரை தமிழ்நாட்டு இல்லத்தரசிகளிடையே நன்கு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஸ்ரீகாந்த், சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படம் மூலம் அறிமுகமானார். இந்தப்படத்தில் சினேகாவை ஒரு தலையாகக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பின் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படம் இவரை அடையாளப்படுத்தியது. தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் டேனியல் பாலாஜிக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

நீயும்.. நானுமா? சிவாஜிக்கு சவால் விட்ட TMS பாடல்.. ஹோம் ஒர்க் செய்து நடித்த நடிகர் திலகம்

அமுதன் என்னும் மருத்துவக் கல்லூரி மாணவனாக டேனியல் பாலாஜி இந்தப் படத்தில் உலகநாயகன் கமலுக்கு நிகராக வில்லத்தனத்தில் அசத்தியிருப்பார். 90 களில் ரகுவரன் செய்த அதே ஸ்டைலான வில்லத்தனத்தை செய்ததால் அவரை அடுத்த ரகுவரன் என்றே ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தனர்.

அதன்பின் வெற்றிமாறனுடன் பொல்லாதவன் படத்தில் நடிக்க முன்னணி இயக்குனர்களின் ஆஸ்தான வில்லன் நடிகர் ஆனார் டேனியல் பாலாஜி. தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, பிகில் மேலும் வடசென்னை என நல்ல வாய்ப்புகள் வர தமிழ் சினிமாவில் வில்லனாக தனது இடத்தினை தக்க வைத்துக் கொண்டார். இவரது உடல் மொழியும், குரலும், நடிப்பும் இவருக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தன. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வந்தவருக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை கொட்டிவாக்கம் மருத்துவனையில் அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் திரையுலகினர், ரசிகர்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.