தயாரிப்பாளரின் தயாள குணம் கண்டு வியந்த இயக்குனர்..! தில்லானா மோகனாம்பாள் உருவானது இப்படித்தான்..!

By Sankar Velu

Published:

தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி, பத்மினி ஜோடியின் பொருத்தம் செம கிளாஸாக இருக்கும். அப்படி ஒரு பொருத்தத்தைப் பல இடங்களில் ஜோடிப் பொருத்தத்திற்கு ஒப்பிட்டுக் கூறுவர். படமும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அது சரி. அந்தப் படம் எப்படி உருவானது என்று தெரியுமா?

தில்லானா மோகனாம்பாள் படத்தின் கதையை முதலில் கொத்தமங்கலம் சுப்பு ஆனந்த விகடன் இதழுக்குத் தொடர்கதையாக எழுதினாராம். அது வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. கதையின் விறுவிறுப்பு வாராவாரம் கொஞ்சமும் குறையவில்லை. இந்தக் கதையை அப்போது ஆர்வத்துடன் படித்து வந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.

உடனே இதை சினிமாவாக எடுத்தால் என்ன என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அதற்காக கதையின் உரிமை யாரிடம் உள்ளது என விசாரித்தாராம். அப்போது அதற்கான உரிமை ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் என்று தெரியவந்ததாம். உடனே அவரை தொடர்பு கொண்டு, இதைப் படமாக்க விரும்புகிறேன். உரிமைத் தொகை எவ்வளவு என்று கேட்க, சற்றே சிந்தித்த வாசன், 25 ஆயிரம் என்றாராம்.

உடனே கொஞ்சமும் பேரம் பேசாமல் செக் எழுதி கொடுத்துவிட்டாராம் ஏபிஎன்.ஏன்னா இந்தக் கதையின் உரிமை 50 ஆயிரமாவது இருக்கும் என்று அவர் எதிர்பார்த்தது தான் காரணம். ஆனால் 25 ஆயிரம் என்றதும், மீதி உள்ள 25 ஆயிரத்தை என்ன செய்வது என்று யோசனை செய்தாராம். உடனே கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவிடம் கொடுத்துவிடலாம் என்று எண்ணி அவரைத் தேடிச் சென்றுள்ளார்.

Kothamangalam subbu, APN
Kothamangalam subbu, APN

அப்போது கொத்தமங்கலம் சுப்புவுக்கு கண் ஆபரேஷன். சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கிறார் என்ற தகவல் அறிந்து அங்கு சென்று பார்த்தாராம் ஏபிஎன். பின்னர் கொண்டு வந்த 25 ஆயிரத்தைக் கொடுத்து விவரத்தை சொல்லவும், ஐயா எனக்கு ஏற்கனவே எஸ்எஸ்.வாசன் 25 ஆயிரம் தந்து விட்டார் என்றார் கொத்தமங்கலம் சுப்பு.

அப்போது தான் எவ்வளவு பெரிய மனுஷன்யா வாசன்னு ஏபிஎன். நினைத்தாராம். ஆனந்தக் கண்ணீர் ஊற்றாய் பெருக, தான் கொண்டு வந்த 25 ஆயிரத்தையும் கொத்தமங்கலம் சுப்புவிடமே கொடுத்து விட்டு அங்கிருந்து மனநிறைவாக சென்றாராம் ஏபி.நாகராஜன்.

1968ல் ஏ.பி.நாகராஜன் இயக்கிய படம் தில்லானா மோகனாம்பாள். சிவாஜி, பத்மினி, நம்பியார், கே.பாலாஜி, டி.எஸ்.பாலையா, தங்கவேலு, நாகேஷ், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகாதேவனின் இசையில் பாடல்கள் எல்லாமே அற்புதம்.

தில்லானா மோகனாம்பாள் படம் உருவானது இப்படித்தான்.