கடந்த ஒரு மாதமாக எல்லாராலும் பேசப்படும் படமாக குணா படம் விளங்குகிறது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் பெரும் வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்து வரும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் குணா குகையை மையமாக வைத்து எடுத்திருந்தனர்.
இப்படம் வெளியானதிலிருந்து குணா படமும் டிரெண்டாகி உள்ளது. சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான அப்படத்தை முதலில் நான் இயக்கி இருக்க வேண்டும் என பிரபல மலையாள இயக்குநர் சிபி மலையில் கூறியிருக்கிறார்.
குணா படம்:
1991ம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியானது குணா திரைப்படம். இப்படத்தில் ரேகா, ரோஹினி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் கொடைக்கானலில் உள்ள மலை குகைகளில் எடுக்கப்பட்டது. அதிலும் ஒரு குகைக்கு குணா குகை என்றே பெயர் இடப்பட்டது.
முன்னதாக இப்படத்திற்கு மதிகெட்டான் சோலை என பெயர் வைப்பதாக இருந்தது. மேலும் இளையராஜா இசையில் வெளியான குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.
கவிதை திறனுடைய ஒரு மனநோயாளியான கமல்ஹாசன் தன் மனதில் நினைத்து வைத்திருக்கும் காதல் தேவதையை கண் முன்னே கண்டதும் அவளை கடத்தி சென்று குகைக்குள் வைத்துக்கொள்கிறான். அவளும் அவன் அன்பான மனதை புரிந்துக்கொள்ளாமல் பல முறை தப்பிக்க முயற்சித்தும் அவளால் வெளியே செல்ல முடியவில்லை. பின்னர் அவன் கவனிப்பதை பார்த்த அபிராமிக்கு காதல் மலர்ந்தது.
அப்பெண்ணின் சொத்திற்கு ஆசைப்பட்டு அவள் தந்தையின் நண்பன் அவளை சுட்டுக் கொன்று விடுகிறான். இறந்து போன தன் காதலியை பார்த்த குணா அவளுடன் சேர்ந்து மலை உச்சியிலிருந்து குதித்து விடுகிறான் என கதையை உருக்கமாக எடுத்திருந்தனர்.
மலையாள இயக்குநர்:
சிபி மலையில் மலையாலத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 1985ம் ஆண்டு வெளியான முத்தாரம்குன்னு வி.ஓ என்ற படத்தின் மூலம் இயகுநராக அறிமுகமானார் . மேலும் கிரீடம், சதயம், களி வீடு அக்சரம், இஷ்டம், பிளாஷ் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். பெரும்பாலாக மம்முட்டி, மோகன்லால் என முன்னணி நடிகர்களை வைத்தே படங்களை உருவாக்கியுள்ளார்.
இதை தொடர்ந்து ஒரு பேட்டியில் பேசிய சிபி மலையில் , குணா படத்திற்கு முன் என்னுடன் ஒரு கதை சேர்ந்து எடுப்பதாக இருந்தது, சர்ச்சையான கதை என்பதால் அதை விட்டுவிட்டு குணா படத்தை உருவாக்க தொடங்கினார். அதற்கு முதன் முதலில் தன்னை இயக்க தேர்வு செய்ததாகவும் அப்போது மோகன்லாலின் பாரதம் படத்தின் பணிகள் கடைசிக் கட்டதில் இருந்த நிலையில் கமல்ஹாசன் அழைத்தபோது என்னால் செல்ல முடியவில்லை. அதனால் வருத்தமடைந்த அவர் தன் நண்பரும் இயக்குநருமான சந்தான பாரதியை வைத்து குணா படத்தை இயக்கினார் என கூறியுள்ளார்.