மதுரை என்றாலே நமக்கு நியாபகம் வருவது மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மல்லிகை பூ தான். அதைத் தாண்டி சாப்பாடு விஷயங்களில் பார்த்தால் மதுரை பன் பரோட்டா மற்றும் கறிதோசை பிரபலமானது. அதே போல் மதுரை என்றால் அனைவராலும் தவிர்க்க முடியாத குளிர்பானம் ‘ஜிகர்தண்டா’. இந்த ஜிகர்தண்டாவை கண்டுபிடித்தது யார், இது எத்தனை வருடம் பழைமையானது என்பதை இனிக் காணலாம்.
ஷேக் மீரான் என்பவர் தான் முதன்முதலாக 1977 ஆம் ஆண்டு மதுரையின் புகழ்பெற்ற ஜிகர்தண்டா கடையை நிறுவியவர். ஷேக் மீரானின் முன்னோர்கள் ரங்கூன், மியான்மரைச் சார்ந்த விவசாயிகள். அவரது தாத்தா பால், பாசுந்தி, பாதாம் பிசின் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ஒரு பானத்தை உருவாக்கினாராம். அதன் பின்பு அவரது தந்தை அதைக் கற்றுக் கொண்டு அதில் சிறிது ஐஸ்க்ரீம் சேர்த்து கொண்டு தயாரித்தாராம். நாங்கள் சிறுவயதில் இருக்கும் போது எங்கள் வீட்டில் அதை வெயில் காலத்தில் குடிப்பதற்காக செய்வார்கள் என்று ஷேக் மீரான் கூறியுள்ளார்.
அதன் பின்பு அதைக் கற்றுக் கொண்ட ஷேக் மீரான் மதுரைக்கு வந்து, தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் சில ரகசிய பொருட்களைத் சேர்த்து அனைவரும் ரசித்து அருந்தும் வகையில் ஜிகர்தண்டாவை உருவாக்கி இன்றளவும் அதே பாரம்பரிய சுவையுடன் கொடுத்து வருகிறார்கள். அவரது கடையை மதுரையில் இருப்பவர்களும் சுற்றுலா பயணிகளும் தவறாமல் சென்று ஜிகர்தண்டாவை சாப்பிட்டு மகிழ்வார்கள்.
மண்டையை பிளக்கும் வெயிலில் ஒரு டம்ளர் ஜிதர்தாண்டா குடித்தால் போதும், சொர்க்கமே கண்ணுக்கு தெரியும். மே மாத உச்சி வெயிலில் மதுரையில் இருக்கும் முக்கிய வீதிகளில் ஜிகர்தண்டா வியாபாரம் அமோகமாக இருக்கும்.
சுண்டக் காய்ச்சிய பாலில், பாதாம் பிசின், நன்னாரி சர்பத் இவற்றுடன் பாசுந்தி, ஐஸ்கிரீம் ஆகியவற்றை சரியான கலவையில் அடுக்கி கொடுப்பது தான் ஜிகர்தண்டா. அடடா கேக்கும் போதே சாப்பிட தோன்றும். ஜிகர்தண்டா குளிர்பானமாக மட்டுமில்லாமல் ஒரு ஹெல்த் ட்ரிங்க்காகவும் உள்ளது. இதில் சேர்க்கப்படும் பாதாம் பிசின் உடல் சூட்டைத் தனித்து குளிர்ச்சி தர வல்லது. பாலில் செய்யப்பட்டது என்பதால் இதில் வைட்டமின்கள் மற்றும் புரோடீன்கள் உள்ளது. இதை வீட்டிலேயே கூட செய்து சாப்பிட்டு மகிழலாம்.