காஞ்சி மஹாபெரியவரையே வியக்க வைத்த நடிகர் திலகம்.. அப்படி ஒரு மேக்கப்!

By John A

Published:

தமிழ் சினிமாவில் ஒப்பனைக் கலை என்பது மட்டும் இல்லை என்றால் இன்று பல உருவங்களை நாம் மறந்தே போயிருப்போம். மேலும் பல மகான்கள், அறிஞர்கள், தலைவர்களின் முகத்திற்கு அடையாளம் கொடுப்பதே இந்த ஒப்பனைக் கலை தான். பிரபலங்களின் பயோபிக்கில் நடிக்கும் போது நடிகர்களும் தாங்கள் ஏற்று நடிக்கும் வேடங்களில் அவர்களாவே மாறி விடுவர்.

அந்த வகையில் அந்தக் காலத்து சினிமாக்களை நாம் பார்த்தோம் என்றால் இது போன்ற ஒப்பனையில் தன்னை அர்ப்பணித்து அந்தத் தலைவர்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் யாரென்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.

உதாரணமாக வீரபாண்டிய கட்டபொம்மனை எடுத்துக்கொள்வோம். வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் செவிவழிகளில் தான் அறிந்திருப்போம். அல்லது படித்திருப்போம். ஆனால் அவர் இப்படித்தான் இருப்பார். இப்படிப் பேசியிருப்பார் என்று கற்பனையில் நடிகர் திலகம் ஏற்று நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தினை வைத்தே அவர் அவ்வாறு தான் இருந்திருப்பார் என்று யோசிக்க வைத்தது.

அதேபோல் நடிகர் திலகம் நடித்த வ.உ.சிதம்பரனாரின் கதையை எடுத்த கப்பலோட்டிய தமிழன் படமும், கர்ணன் திரைப்படத்தில் மகாபாரதக் கர்ணனையும் நினைவுப் படுத்தியது. அதேபோல் நடிகைகளில் அம்மன் என்றால் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று வியக்க வைக்கும் அளவிற்கு நடிகை கே.ஆர். விஜயா அம்மன் கதாபாத்திரங்களில் கலக்கியிருப்பார்.

அந்தவகையில் நடிகர் திலகம் தான் நடித்த ஒரு படத்தில் காஞ்சி மஹாபெரியவரையே அது நானா என்று வியக்க வைத்திருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் 1967ல் ஏ.பி. நாகராஜன இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் ‘திருவருட் செல்வர்‘.

பாட்டிலேயே எம்.ஜி.ஆருக்கு சமரச தூது விட்ட கவிஞர் கண்ணதாசன்.. அந்தப் பாட்டு வரிக்கு இதான் அர்த்தமா?

இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் அப்பர் திருநாவுக்கரசராக ஈசன் அடியாராக நடித்திருப்பார். உண்மையாகவே அப்பர் இவ்வாறு தான் இருந்திருப்பாரோ என்று வியக்க வைக்கும் அளவிற்கு அவருக்கு போடப்பட்ட ஒப்பனையும், அவர் நடித்த பாங்கும் அமைந்திருக்கும்.

ஒருமுறை இந்தப் பட வெளியீட்டின் போது காரில் சென்று கொண்டிருந்த காஞ்சி மகா பெரியவர் திருவருட்செல்வர் படத்தின் போஸ்டர்களை வீதியில் பார்த்து விட்டு யாரது எதற்காக என்னுடைய புகைப்படங்களை ஒட்டி வைத்திருக்கிறார்கள். எனக்கு விளம்பரங்கள் பிடிக்காது என்று தெரியாதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு உதவியாளர்கள் அது உங்கள் புகைப்படம் அல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவருட்செல்வர் படத்தின் போஸ்டர்கள் என்று விளக்கம் கூறியிருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு நடிகர் திலகம் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களில் ஒன்றிப் நடிப்பார் என்பதற்கு திருவருட்செல்வர் ஓர் சான்று.