இதனால்தான் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டேன்… சமுத்திரக்கனி கருத்து…

சமுத்திரக்கனி இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகரானவர். இவர் இயக்கிய திரைப்படங்ளில் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது ‘நாடோடிகள்’, ‘சாட்டை’, ‘அப்பா’ ஆகும். இவரின் இயக்கத்திலும் சரி நடிப்பிலும் சரி வெளியாகும் படங்கள் சமூக அக்கறையோடு சமூகத்திற்கு ஒரு ஆழமான கருத்தைச் சொல்வதாக இருக்கும்.

நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான படம் ‘நாடோடிகள்’. இப்படத்தில் நடிகர் சசிகுமாரின் நடிப்பு அபாரமாக இருக்கும். அடுத்து சமுத்திரக்கனி இயக்கிய ‘சாட்டை’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான பந்தம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இப்படம் இருந்தது.

இதையடுத்து ‘அப்பா’ திரைப்படத்தில் ‘மனிதர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்ற கருத்தை ஆழமாக சொல்லியிருப்பார் இயக்குனர் சமுத்திரக்கனி. மேலும் குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, அதைத் தாண்டி கற்றுக்கொள்வதற்கு இந்த சமூகத்தில் நிறைய இருக்கிறது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளும் விதமாக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருந்தது. இப்படி இவரின் படங்களைப் பற்றி சொல்லிக்கொன்டே போகலாம்.

இந்த நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனி தற்போது நடிப்பில் பிஸியாக உள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சமுத்திரக்கனியின் ‘யாவரும் வல்லவரே’ என்ற திரைப்படம் இன்று (மார்ச் 15) ரிலீஸாகிறது.

முன்பு போல் படங்களை இயக்காமல் நடிப்பில் மட்டும் ஏன் கவனம் செலுத்துகிறார் என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பதில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால், ‘அப்பா’ படத்தை இயக்கிவிட்டு அதை ரிலீஸ் செய்வதற்கு நான் பட்டபாடு எனக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு அடுத்ததாக நான் இயக்கிய ‘அடுத்த சாட்டை’ படத்திற்கும் இதே நிலைதான்.

ஒரு படத்தை இயக்கும்போது எனக்கு இருக்கும் மகிழ்ச்சி அதை வெளியிடும் போது இல்லை. அதனால்தான் படம் இயக்குவதை நிறுத்திவிட்டேன். இப்போது நடிப்பிற்கான வாய்ப்புகள் வருகிறது, அதில் சிறந்ததை தேர்வு செய்து நடித்து வருகிறேன். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மலையாள படங்கள் இங்கு தமிழ்நாட்டில் ஓடுகின்றன. அதே போல் தமிழ் சினிமாவிலும் நல்ல படங்கள் உள்ளன. தமிழில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களையும் வெளியிட உதவுங்கள் என்று கூறியிருந்தார் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews