முருகனின் அடியவராக இருந்தவர் பாம்பன் ஸ்வாமிகள், இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை பூர்விகமாக கொண்ட ஸ்வாமிகளுக்கு முருகப்பெருமான் நேரில் தோன்றி ஆசி வழங்கியுள்ளார். இவர் இராமநாதபுரம் பிரப்பன் வலசையில் கடும் தவம் மேற்கொண்டு முருகனின் தரிசனம் கண்டவர்.
பின்பு ஒரு கட்டத்தில் சென்னைக்கு பயணித்த ஸ்வாமிகள்,1923ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த போது இவர் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73.ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறி கைவிடப்பட்டார்.அங்கு தொடர்ந்து தான் முருகன் மீது இயற்றிய சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.சென்னை மருத்துவமனையில் “மன்ரோ வார்டில்” பாம்பன் சுவாமிகளின் திருவுருவப்படம் மாட்டப்பட்டு நோயாளிகளால் வழிபடப்படுகிறார்.
பாம்பன் ஸ்வாமிகளின் ஜீவசமாதி சென்னை திருவான்மியூரில் உள்ளது மனதுக்கு அமைதி சேர்க்கும் அருமையான இடம் இது.
இந்த சண்முக கவசம் பற்றி பல முறை பல பதிவுகளில் சொல்லி இருந்தாலும் கொடிய நோய் துன்புறுத்தி வரும் இவ்வேளையில் இந்த சண்முக கவசம் பாடி வருவது நோய் தொற்றில் இருந்தும் காத்தருள்வது மட்டுமின்றி பேராபத்து சூழ்ந்துள்ள இவ்வுலகத்தை முருகப்பெருமான் காத்தருள்வார் என்பது உறுதி.