திரையுலகில் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி தற்போது நடிகராக பேக் டு பேக் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார் விஜய் ஆண்டனி. இறுதியாக அவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ மற்றும் ‘கொலை’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ‘ரோமியோ’. இது ரொமான்டிக் காதல் கதையம்சம் கொண்ட படமாகும். விஜய் ஆண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான குட் டெவில் ப்ரொடெக்ஷன்ஸ் கீழ் இப்படத்தை அவரே தயாரிக்கிறார்.
தனது புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் இளம் மற்றும் திறமையான, ஆர்வமுள்ள இயக்குனர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளார். அதன்படி ‘ரோமியோ’ படத்தின் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்கிடம் ‘கானம்’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மேலும் யூ டியூபில் ‘காதல் டிஸ்டன்சிங்’ என்ற தொடரையும் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார். வி.டி.வி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் மட்டுமல்லாமல் ‘ரோமியோ’ திரைப்படம் தெலுங்கில் ‘லவ் குரு’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு ‘ரோமியோ’ திரைப்படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.