சமுத்திரக்கனி நடிப்பில் ‘அரிசி’… படப்பிடிப்பு நிறைவு… என்னது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறாரா…

By Meena

Published:

மோனிகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் ஆகியோர் நடித்த திரைப்படம் ‘அரிசி’. பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் விவசாயத்தைப் பற்றிய உண்மைச் சம்பவங்களை இப்படம் எடுத்துரைக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள், மேற்கத்திய உணவுகளை மக்களுக்கு ஆசைக் காட்டி, விளம்பரப்படுத்திக் கொண்டு நம் பாரம்பரிய உணவுகளை எப்படி அழித்து வருகிறது என்பதை இப்படம் எடுத்துக்காட்டும். மேலும் நம் பாரம்பரியத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற விழுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் எஸ். ஏ. விஜயகுமார் கூறுகையில், அரிசி என்பது உணவு தானியம் மட்டுமல்ல அது மனித வாழ்வின் உயிர் நாடி என்பதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இப்படத்தில் தோழர் முத்தரசன் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் கண்டிப்பாக பார்வையாளர்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

இந்தப்படத்தில் முதல்முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு விவசாயி என்பதால் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அனைவரும் பேசும் விதமாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்புகளை விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் எடுத்துள்ளனர்.

மேலும் இப்படத்தில், ரஷ்யா மாயன், சிசர், மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி , சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ‘அரிசி’ திரைப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.