தாலி எடுத்துக் கொடுத்த கண்ணதாசன்.. நடிகர் திலகத்தின் திருமண சுவாரஸ்யங்கள்..

By John A

Published:

சாதாரணமாக ஒரு வீட்டுத் திருமணம் என்றாலே அந்தக் குடும்பமே சுமார் 3 மாதங்களுக்கு முன்பே தயாராகி விடுவர். பந்தல் முதல் பந்தி வரை பரபபரப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். இதுவே ஒரு பிரபலத்தின் திருமணம் என்றால் சொல்லவா வேண்டும். அதுவும் திரையில் அப்போது உச்சத்தில் இருந்த ஒரு ஆளுமை நடிகர் திலகத்தின் திருமணம் என்றால் எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்.

ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருமணம் மிகவும் எளிய முறையில் நடைபெற்றது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது அக்காள் மகள் கமலா அம்மையாரைத் தான் திருமணம் முடித்திருக்கிறார்.

அவர் கமலா அம்மாளைத் திருமணம் செய்து கொண்ட ஆண்டு 1952 மே மாதம் 1ம்தேதி. பெரியவர்களாகப் பார்த்து நிச்சயிக்கப்பட்டதுதான் இவர்கள் திருமணம். கமலா அம்மையார் பிறந்த போது அவர் சிவாஜிக்குத்தான் என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தாராம் அவரது அக்கா.

இவ்வாறு இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு கொண்டு சுவாமி மலையில் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தருணத்தில் தான் அவரது முதல்படமான பராசக்தியின் படப்பிடிப்பும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

‘அண்ணாமலை‘ படத்தைப் பார்த்து சுரேஷ் கிருஷ்ணாவை அறிவு இருக்கான்னு கேட்ட கே. பாலச்சந்தர்.. அதிர்ந்து போன இயக்குநர்

இவர்களின் திருணமத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தி.மு.க.தலைவர் கருணாநிதி, நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளர் பெருமாள் முதலியார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். தமிழ் முறைப்படி திருக்குறள் ஓதப்பட்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. கண்ணதாசன் தாலி எடுத்துக் கொடுத்து இவர்களது திருமணத்தினை சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார். இதன் பின்னர் விருந்தினர்களுக்கு அருகிலுள்ள ஹோட்டலில் இருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்டு கல்யாண விருந்து நடைபெற்றது.

அன்றைய காலத்தில் இவர்களின் மொத்த திருமணச் செலவே ரூ.500 தான். அதன்பின் இருவரும் இல்லறத்தில் நல்லறம் கண்டு வாழ்ந்தனர். கமலாவிற்கு எல்லாமே சிவாஜிதான். சிவாஜியும் தனது மனைவியைக் கமலா.. கமலா.. என்றும் சூரக்கோட்டை ராணி என்றும் செல்லமாக அழைப்பாராம். சினிமா நடிப்பைத் தவிர வேறொன்றும் அறியாத சிவாஜிக்கு தக்க துணையாக இருந்து வாழ்வின் அனைத்து நிலைகளிலும் கமலா அம்மாள் இருந்திருக்கிறார்.