இயக்குனர் ஷார்வியின் ‘பெட்டர் டுமாரோ’… என்ன கதைக்களம்…?

By Meena

Published:

‘டூ ஓவர்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஷார்வி. சமூக பிரச்னைகளை உள்ளடக்கி, மது துஷ்ப்ரயோகத்தால் ஒருவர் வாழ்வில் முதலிருந்து இறுதிவரை என்ன ஆகிறது என்பதை இப்படத்தில் காட்டியிருப்பார். இந்தப் படத்திற்காக பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

அடுத்ததாக, பிரேமா பிலிம்ஸ் இன்டெர்நேஷனல் சார்பில் சைலேந்திர சுக்லா தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷார்வி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பெட்டர் டுமாரோ’. இப்படத்தில் மானவ், கௌரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஸ் தர்மராஜ், சைலேந்திர சுக்லா, சரவணன், பி. ஜீ. வெற்றிவேல், யுவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

‘டூ ஓவர்’ திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் 125 விருதுகள் பெற்ற இயக்குனர் ஷார்வி, உண்மை நிகழ்வுகளை அடிப்டையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். எம். டி. எம். ஏ என்ற ஆபத்தான போதைப் பொருளுக்கு அடிமையாய் இருக்கும் ஓரு பெண்ணை, அவளது அண்ணன் போதைப் பழக்கத்திலிருந்து மீட்டு இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வர அவன் சந்திக்கும் போராட்டங்களை இப்படம் விவரிக்கிறது.

போதைப் பழக்கம் எவ்வளவு ஆபத்தானது, போதைப் பழக்கம் கொண்டுள்ள நபரால் அவர் மட்டுமல்ல அவரைச் சார்ந்தவர்களும், அவரது குடும்பத்தாரும் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதிலும் ஒரு பெண் போதைக்கு அடிமையானால் என்னவாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஷார்வி.

அது மட்டுமல்லாமல் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது பற்றியும், அதனால் உளவியல் ரீதியான பாதிப்புகளை அடைந்தவர்களுக்கு தைரியமூட்டும் வகையில் இப்படத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஷார்வி. பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் இப்படம் கண்டிப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார். மேலும் இத்திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.