நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகள் சில ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், நிதி நெருக்கடி காரணமாக சற்று தாமதமாகி கொண்டிருந்தது. அதற்காக வங்கியில் 40 கோடி ரூபாய் கடன் வாங்க இருப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், முதலாவதாக நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டடப் பணிக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் தனது பங்களிப்பை கொடுத்தார்.
சமீபத்தில், நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்காக உலகநாயகன் கமலஹாசன் ஒரு கோடி ருபாய் நிதி வழங்கினார். அந்த காசோலையை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் நடிகர் கமலஹாசனை நேரில் சந்தித்து நடிகர் சங்க நிர்வாகிகளான விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது சொந்த நிதியிலிருந்து நடிகர் சங்க கட்டடப் பணிக்காக ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். அதற்காக நடிகர் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆன நடிகர் விஷால் நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தார்.
இதைப் பற்றி நடிகர் விஷால் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார், அதில் நடிகர் விஜய் அவர்களை குறிப்பிட்டு, உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் நடிகர் சங்க கட்டடம் முழுமையடையாது என்பதை நாங்கள் அறிவோம். நன்றி என்பதை வார்த்தையால் மட்டும் அல்ல செயல்களாலும் தெரிவிக்கலாம். அதன்படி எங்கள் நன்றியை செயலில் காட்டுவோம். தங்களது நிதியுதவி நடிகர் சங்க கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க எங்களை தூண்டியுள்ளது. நன்றி நண்பா என்று பதிவிட்டிருந்தார்.