மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வரை இயக்கி அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்க காத்திருக்கும் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் எல்சியூ என்ற யுனிவர்ஸ் மூலம் கமல், ரஜினி, கார்த்தி ஆகியோரின் திரைப்படங்களான கைதி, விக்ரம், லியோ என்ற திரைப்படத்தின் மூலம் ஒன்றாக இணைத்து வருங்காலத்தில் அனைத்து நடிகர்களையும் ஒரே படத்தில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அவரது இயக்கத்தில் கடைசியாக உருவாகி இருந்த லியோ திரைப்படம், சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்திருந்தாலும், ரஜினியின் படத்தில் நிச்சயம் நல்லதொரு கம்பேக் கொடுப்பார் என்பதும் ரசிகர்கள் நம்பிக்கையாக உள்ளது. அது மட்டுமில்லாமல், குறுகிய காலத்திலேயே திரையுலகின் முன்னணி நடிகர்களை இயக்கவும் செய்துள்ளதால் தமிழ் சினிமா கண்ட முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அவர் இருப்பார் என்றும் தெரிகிறது.
இதனிடையே, எல்சியூவில் இணைந்து நடிக்க லோகேஷ் கனகராஜ் கேட்டுக் கொண்டும் ஒரு நடிகர் இணைய மறுத்தது பற்றி தற்போது பார்க்கலாம். ஒரு காலத்தில் ஆர்ஜேவாக இருந்து பின் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இன்று நடிகராகவும் முன்னேறி இருப்பவர் தான் ஆர் ஜே பாலாஜி. இவரது நடிப்பில் சமீபத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை கோகுல் இயக்கி இருந்தார்.
நானும் ரவுடி தான், காற்று வெளியிடை உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஆர் ஜே பாலாஜி பின்னர், எல்கேஜி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும் மாறி இருந்தார்.
அது மட்டுமில்லாமல் சில திரைப்படங்களின் இயக்குனராகவும் பணிபுரிந்த பாலாஜி, தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிகராகவும் நடித்து வருகிறார். இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நடிக்க மறுத்தது தொடர்பான தகவல், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
இது பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்ஜே பாலாஜி, “லோகேஷ் கனகராஜ் எனது மிகவும் நெருங்கிய நண்பர். அவர் எல்சியூவில் என்னை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படி அழைத்தார். ஆனால் நடிகர், இயக்குனர் என நல்ல ரூட்டில் போய்க்கொண்டிருக்கும் போது அது போன்ற வாய்ப்புகளை வேண்டாம் என்று நான் நினைத்து விட்டேன். அதனால் எனது நண்பனாக லோகேஷ் இருந்தபோதிலும் எல்சியூ போன்ற பெரிய வாய்ப்பை நான் நிராகரித்து விட்டேன்.
ஹீரோ, இயக்குனர் என ஒரு பாதையில் ரிசிகர்கள் என்னை ரசிக்க தொடங்கிவிட்டனர். மீண்டும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு சரியாக படவில்லை. அதே போல தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் சிறிய கதாபாத்திரம் என்பதால் அந்த நேரத்தில் வேண்டாம் என சொல்லி விட்டேன்” என ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.