புதுக்கோட்டை அருகே கறம்பக்குடி என்ற சிற்றூரில் பிறந்து தனது 5 வயதிலிருந்து நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு வளர்ந்து இன்று புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் செந்தில் கணேசன். பிரபல நாட்டுப்புறப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி-அனிதா குப்புசாமி தம்பதியரைப் போல் செந்தில் கணேசும் தன்னைப் போல் ஒரு நாட்டுப் புறப் பாடகரான ராஜலட்சுமியை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இளையராஜா சவால் விட்டு ஜெயித்த தேசிய விருதுப் பாடல்.. இந்தப் பாட்டுக்கு இத்தனை ஹோம் ஒர்க்-ஆ?
தம்பதியர் இருவரும் சேர்ந்து பல கிராமிய இசைநிகழ்ச்சிகளை அரங்கேற்றியிருக்கின்றனர். கிட்டத்தட்ட 3000 கச்சேரிகளுக்கு மேல் அவர்கள் பாடியிருக்கிறார்கள். கடந்த 2018-ல் விஜய்டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன்-6 நிகழ்ச்சி இவர்களைப் பிரபலப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் இருவரும் பங்குகொண்டு இறுதிப் போட்டி வரை சென்று வெற்றி வாகை சூடி 50 லட்சம் மதிப்புள்ள வீட்டினை பரிசாக வென்றார்கள்.
இதன்பிறகு இவர்களது வாழ்வில் ஏறுமுகம் தான். இவர்கள் பாடிய பாடலான ஏய் சின்ன மச்சான்.. செவத்த மச்சான் பாடல் எங்கும் பிரபலமாக ஒலிக்கத் தொடங்கியது. மேடைதோறும் தங்களின் பேவரைட் பாடலான சின்ன மச்சான் பாடலை இவர்கள் பாட அரங்கங்களே அதிர்ந்தன.
இந்தப் பாடலை சினிமாவில் பயன்படுத்த விரும்பிய இயக்குநர் ஷக்தி சிதம்பரம், பிரபுதேவா-நிக்கிகல்ராணி நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் இவர்களுக்கு வாய்பளித்தார். நடிகை ஜெயச்சித்ராவின் மகனான அம்ரீஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். இவரின் இசையில் ஏய்..சின்ன மச்சான் பாடல் மீண்டும் திரைப்படப் பாடல் வடிவில் ஒலிக்க ஆரம்பித்தது.
இதற்கு முன்னர் இந்தப் பாடலின் வரிகள் மேடைகளில் பாடப்படும் போது வேறொன்றாக இருக்கும். ஆனால் திரைப்படத்திற்காக மூலப்பாடலை எழுதிய செல்ல தங்கையாவே திருத்தி எழுதினார். அதே செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி குரலில் உருவான இந்தப் பாடல் முன்பு பாடியதைக் காட்டிலும் பிரபலமடைந்தது. பிரபுதேவா-நிக்கிகல்ராணியின் நடனம் பாடலை அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்படியாக மாற்றியது.
இவ்வாறு தங்களது மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்த ஒரு பாடலானது திரைப்படப் பாடல் வடிவில் அதுவும் அவர்களது குரலிலேயே வெளிவந்து தொடர்ச்சியாக அவர்கள் இருவருக்கும் பல வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. மேலும் தற்போது ராஜலட்சுமி திரைப்படம் ஒன்றில் கதையின் நாயகியாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
