GVM படத்துல வர்ற ‘கால்’ செண்டிமெண்ட்.. அடேங்கப்பா., இது பின்னாடி ஒரு எமோஷனல் காரணமா..

By Ajith V

Published:

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு ஜானருக்குள்ள கதைகளுக்கென பிரத்யேகமாக பல இயக்குனர்கள் உள்ளனர். உதாரணத்திற்கு, குடும்பம் மற்றும் எமோஷனல் கலந்த திரைப்படம் எடுக்கும் இயக்குனர் என்றால் விக்ரமனை சொல்லலாம். அதே போல, தமிழ் சினிமாவில் காதல் படங்களின் ஸ்பெஷலிஸ்ட் என்றால் முதலில் நம் மனதில் தோன்றுவது கௌதம் வாசுதேவ் மேனன் தான்.

மாதவன், ரீமாசென், அப்பாஸ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்த மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இதன் பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

மேலும் சமீபத்தில் வருண் நாயகனாக நடித்த ஜோஸ்வா இமை போல காக்க என்ற திரைப்படத்தையும் கெளதம் வாசுதேவன் மேனன் இயக்கி இருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக, கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களில் ஆக்ஷன் இருக்கும் அளவை விட காதல் அதிகமாக இருக்கும்.

அவரது திரைப்படத்தில் வரும் காதல் காட்சிகள் என்றென்றைக்கும் புதிதாக இருக்கும் அளவுக்கு தான் உருவாக்கப்பட்டிருக்கும். புதிதாக காதலிக்கும் பலருக்கும் கூட கௌதம் படத்தில் வரும் காட்சிகள், அந்த அளவுக்கு ஒரு எனர்ஜியை கொடுக்கும் வகையில் தான் அமைந்திருக்கும். காதலர்கள் கொண்டாடும் பிரபல இயக்குனராக இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படத்தில் பெரும்பாலும் நடிகைகளின் காலைத் தொட்டோ அல்லது நாயகியின் காலை ஒரு மிகப் புனிதமான இடத்தை பார்ப்பது போல காட்சிகள் இடம்பெறும்.

இதை பார்க்கும் பலரும் நிஜ வாழ்க்கையில் கூட சில விஷயங்களை தொடர்புபடுத்தி பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இது பற்றி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் சமீபத்தில் பேட்டி ஒன்றில், நீங்கள் ஏன் பெரும்பாலும் நடிகைகளின் கால்களை புனிதமாக காண்பித்து அதில் கையை நடிகர் வைத்து ஃபீல் செய்யும் காட்சியை எடுக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கௌதம் வாசுதேவன், “ஒரு பெண்ணின் காலில் அந்த அளவுக்கு ஒரு காதல் ஈர்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். அதனால் தான் நான் அதுபோன்ற காட்சிகளை என்னுடைய திரைப்படங்களில் வைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் நான் வளர்ந்த போதும் அது போன்று நேரில் கூட பார்த்துள்ளேன்.

என் தாய் ஃசோபாவில் அமர்ந்திருக்க அவர் அருகே கீழே இருக்கும் என் தந்தை தாயின் காலை பிடித்து வைத்துக் கொண்டே இருப்பார். அதில் ஒரு உணர்வும், எமோஷனும் இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த காட்சியை தான் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சிம்ரனின் காலை சூர்யா பிடிப்பது போல வைத்திருப்பேன்” என கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.