தான் எடுத்தது சில படங்கள் தான் என்றாலும் அத்தனை படங்களிலும் காதல் ஒன்றையே பிரதான கதையாக வைத்து இப்படியும் ஒரு லவ் ஸ்டோரி படமா என்று 90-களில் பேச வைத்தவர் இயக்குநர் கதிர். மூன்றாம் பிறை, அந்த 7 நாட்கள் போன்ற பல படங்களுக்கு போஸ்டர் டிசைனராக தனது திரை வாழ்க்கையைத் துவக்கய இயக்குநர் கதிர், பாண்டியராஜன், ஜி.எம்.குமார் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி பின் இதயம் என்ற சூப்பர் காதல் காவியத்தை இயக்கி 80-களில் பிறந்தவர்களின் மனதினை உருக வைத்தார்.
மனதிற்குள்ளேயே காதலைப் பூட்டி வைத்து அதை வெளிப்படுத்தாமல் இருக்கும் இளைஞனின் உணர்வுகளை செதுக்கியிருந்தார் இயக்குநர் கதிர். முரளியின் அபார நடிப்பு இதில் பேசப்பட்டது. இசைஞானியின் இசை படத்திற்குப் பெரும் பலம் சேர்த்தது.
‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா‘ என்ற பாடல் யேசுதாஸ் குரலில் இன்றும் நம் பழைய காதலை நினைவுப் படுத்தும் ஒரு ரீங்கார ராகம். 90-களில் வந்த காதல் படங்களில் இதயம் படம் ஒரு முக்கிய இடத்தினைப் படித்தது. முரளியும் இதயம் முரளி என கொண்டாடப்பட்டார்.
அதன்பிறகு இயக்குநர் கதிர் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இருக்கும் பொழுது ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்திருக்கிறார். அப்போது ரோஜா படத்திற்காக ‘புது வெள்ளை மழை‘ பாடலை இயக்குநர் கதிருக்கு போட்டுக் காட்ட டிஜிட்டல் இசையில் மயங்கிப் போயிருக்கிறார் இயக்குநர் கதிர். ஆனால் அப்போது ரோஜா படம் வெளிவரவில்லை.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் திறமையை அறிந்த இயக்குநர் கதிர், ரோஜா படம் வெளியானால் ரஹ்மானிடம் டைரக்டர்கள் அடுத்தடுத்து படையெடுத்து நிற்பர் என்பதை அறிந்து முன்கூட்டியே அவரைத் தனது அடுத்த படத்திற்கான இசையமைப்பாளராக புக் செய்தார். மேலும் தனது தயாரிப்பாளரிடம் உடனடியாக 10,000 ரூபாய் அட்வான்ஸ் பெற்று ரஹ்மானுக்குக் கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் கதிர் கணித்தது போலவே ஏ.ஆர்.ரஹ்மானை உலகமே கொண்டாட கதிர் தனது அடுத்தடுத்த படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைக்க வைத்திருக்கிறார். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்தும் பாடல்களுக்காகவே ஹிட் ஆனது. அந்தப் படங்கள்தான் பிரபு, ரம்பா நடித்த உழவன், வினித், அப்பாஸ், தபு நடித்த காதல் தேசம், குணால் நடித்த காதலர் தினம், ரிச்சர்டு, அப்பாஸ் நடித்த காதல் வைரஸ் உள்ளிட்ட படங்கள்.
இந்தப் படங்கள் அத்தனைக்குமே ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எந்த அளவிற்குக் கை கொடுத்தது என்று அந்தப் படங்களின் ஹிட் பாடல்களை அன்றும் இன்றும் என்றும் நாம் கேட்டு ரசிப்பதிலேயே தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக காதல் தேசம் மற்றும் காதலர் தினம் படப் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் மாஸ்டர் பீஸ் படங்கள் என்றே சொல்லலாம்.