தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். ஆரம்ப காலங்களில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த அஜித், சமீப காலமாக அதிக இடைவெளியுடன் தான் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹெச். வினோத்தின் அடுத்தடுத்த இயக்கங்களில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததன் பிறகு ஒரு அறிவிப்பு கூட படத்தைப் பற்றி அதிகாரபூர்வமாக வரவில்லை என்ற சூழலில் சமீபத்தில் அஜித் ரசிகர்கள் ஒரு அலப்பறையான காரியத்தையும் செய்திருந்தனர். அதாவது படத்தின் பெயரை அறிவித்து 300 நாட்கள் ஆகியும் அதன் பின்னர் எந்த அப்டேட்டும் வரவில்லை என அப்டேட் இல்லாத 300 நாட்கள் என பேனர் அடித்து அதனை பெரிதாக டிரெண்ட் பண்ணவும் செய்திருந்தனர்.
ஆனால் அதே வேளையில் வெளிநாடுகளில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அஜித்குமார், ஆரவ், ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் கூட சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளியாகி வந்தது. இதனால் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்பது உண்மை தான் என்றும் அஜித் ரசிகர்கள் சற்று குதூகலத்தில் உள்ளனர்.
இருந்தாலும் படத்தின் ரிலீஸ் பற்றியோ, டீசர் பற்றியோ ஏதாவது அப்டேட்டை விட்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அப்படி ஒரு சூழலில் தான் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் அஜித் குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதில் அஜித் எந்த பிரச்சனைகளிலும் பெரிதாக தலையிட மாட்டார் என்றும் குடும்ப விஷயங்களை பேசினால் மட்டும் நம்மிடம் அதைப் பற்றி கேட்பார் என்றும் டெல்லி கணேஷ் தெரிவிக்க, நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தையும் தற்போது நினைவு கூர்ந்துள்ளார். நீண்ட நாட்கள் கழித்து அஜித்குமார் படத்தில் டெல்லி கணேஷ் நடித்த படம் என்றால் அது நேர்கொண்ட பார்வை தான்.
அப்போது அஜித் நடிப்பதற்காக தயாராக, டெல்லி கணேஷ் வருவதை பார்த்ததும் உடனடியாக எழுந்து, ‘எப்ப வந்தீங்க நல்லா இருக்கீங்களா’ என கேட்டபடி அவரின் காலில் விழுந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. சுற்றி 300 ஆர்டிஸ்ட்கள் வரையில் இருந்த போதிலும் இந்த சம்பவத்தை அஜித் செய்ததை பெரிய விஷயம் என குறிப்பிட்டதுடன் இதை அனைவரின் முன்பும் சொல்லியாக வேண்டும் என டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார்.