வாழ்ந்தா இப்படி வாழணும்.. சிரிக்க வைத்த மகா கலைஞன் என்.எஸ்.கே-வின் இறுதி நிமிடங்கள்..

By John A

Published:

மறைந்த பழம்பெரும் நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணண் பற்றி தெரியாதவர் யாருமில்லை. வெள்ளித்திரையின் முதல் காமெடி நடிகர். தனது கூர்தீட்டப்பட்ட சமூக அக்கறை வசனங்களை காமெடி கலந்து கூறி அன்றைய தலைமுறையை யோசிக்க வைத்தவர். இவரது மனைவி மதுரமும் காமெடியில் கொடிகட்டிப் பறக்க இருவரது காம்போவும் அப்போது ரசிகர்களுக்கு புது விருந்தாக அமைந்தது.

கலைவாணரின் நல்ல மனதினைப் பார்த்து கணவனாக ஏற்றுக் கொண்டவர்தான் அவர் மனைவி மதுரம். இவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்கள். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதன் முதலில் 100 படங்களில் நடித்தவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்கள் இவர்களே.

நடிப்பு ஒரு தொழிலாக இருந்தாலும் இப்போது நாம் கேப்டன் விஜயகாந்தை கொண்டாடுவது போலவே அன்றைய தலைமுறை இவர்களைக் கொண்டாடியிருக்கிறது. காரணம் இவர்களது இரக்க குணம். இல்லையென்று வந்தவர்களுக்கு முகம் வாடாது கையில் இருப்பதைக் கொடுத்தனுப்பும் வள்ளலாக இருந்துள்ளார் என்.எஸ்.கிருஷ்ணன். கணவனின் கொடைத்தன்மைக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார் மனைவி மதுரம்.

திரைப்படங்களில் படுபிஸியாக நடித்துக் கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனுக்கு திடீரென உடல் நலம் குன்றியது. டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சையில் இருந்த கலைவாணருக்கு 10 நாட்களில் வீடு திரும்பலாம் என நம்பிக்கை கொடுத்துள்ளனர் மருத்துவர்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்யாகிப் போனது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், திடீரென உடல்நிலை மோசமாகி தமது 49வது வயதில் காலமானார். இவரின் இறப்புச் செய்தி அறிந்ததும், சென்னையில் இயங்கி வந்த சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் மூடப்பட்டன. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி உள்பட திரையுலகமே திரண்டு என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

வானொலி பேட்டியில் ஒன்றுமே பேசாத ரஜினி.. கடைசி வரை ஒலிபரப்பாமல் போன காரணம் இதான்..

ரசிகர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். இவரது வாழ்விலும், தாழ்விலும் இணை பிரியாத நண்பராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், நண்பனின் உடலைப் பார்த்து “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று கதறினார்.

மறுநாள் நடந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் நாகையா தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, தியாகராஜ பாகவதர், கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன், கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டு அவரின் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேச எழுந்தார். ஆனால் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுது பேச முடியாமல் மேடையை விட்டு இறங்கிவிட்டார். கலைவாணர் என்.எஸ்.கே. மரணத்துக்கு பிறகு, அவர் நடித்த “அம்பிகாபதி” வெளிவந்தது. இந்தப் படத்தில், அவர் இறந்து விடுவதாக கதையை முடித்து, அவருக்கு சிலை வைக்கப்படுவதாகக் காட்டினார்கள். கலைவாணர் மரணத்தால், தமிழ்த் திரை உலகில் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு பணம் இல்லாத போது, வீட்டில் உள்ள வெள்ளிப்பாத்திரங்களைக் கொடுத்து உதவி கர்ணணாகத் திகழ்ந்திருக்கிறார் கலைவாணர்.