நவராத்திரி படத்தில் 9 கேரக்டர்.. சினிமா ரசிகர்களையே மிரட்டிய படத்தில் சிவாஜி நடித்த வியப்பான காரணம்..

By Ajith V

Published:

இந்த காலத்திலும் சினிமாவில் பெரிய நடிகராக வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு டூட்டோரியல் ஆக இருப்பது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படங்களிலும் வரும் அவரது கதாபாத்திரங்கள் மற்றும் நடிப்புத் திறன் தான். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நடிப்பு பயிற்சி மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு சிவாஜி நடித்த திரைப்படங்களை பார்த்தே ஒருவர் நடிப்பை கற்றுக் கொள்ளும் அளவிற்கு பல நுணுக்கமான விஷயங்களை தனது கேரக்டர்கள் மூலம் பிரதிபலித்துள்ளார் சிவாஜி.

தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தனது கேரக்டர் வித்தியாசமாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் அதற்கான மெனக்கெடலும் சிவாஜியிடம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே ஒரு படத்தில் இருந்து மற்ற படத்திற்கு சிவாஜி நடிக்கும் போது மாறுபட்டு தெரிந்ததால் ரசிகர்களும் எந்தவித சலிப்பும் இல்லாமல் இருக்க, தொடர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வந்தார் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகன்.

அந்த வகையில் நடிகர் சிவாஜியுடைய திரை பயணத்தில் மிக முக்கியமான ஒரு திரைப்படம் தான் நவராத்திரி. கடந்த 1964 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்திலேயே டெக்னாலஜி எதுவும் இல்லாத சமயத்தில் கூட அவ்வளவு அற்புதமாக அதுவும் ஒன்பது கேரக்டர்களில் நடித்து பின்னி பெடல் எடுத்திருப்பார்.

ஒன்பது வேடங்களில் சிவாஜி இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் கிளைமாக்சில் அவர்கள் சேர்ந்து வரும் காட்சிகள் ரசிகர்களை இன்று வரையிலும் மிரள வைத்து தான் வருகிறது. அப்படி இருக்கையில் நவராத்திரி திரைப்படத்தில் ஒன்பது வேடங்களில் சிவாஜி நடிக்க வேண்டும் என்ற நினைத்ததன் பின்னணி ரசிகர்களை தற்போது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிவாஜி நாடகங்களில் நடித்து வந்த காலகட்டத்தில், எந்த வாய்ப்பும் கிடைக்காத போது வேறு நாடகங்களை சென்று பார்ப்பதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார். அப்படி ஒரு முறை அவர் சென்று பார்த்த நாடகமான டம்பாசாரியில் சாமி ஐயர் என்ற நடிகர் ஒன்பது வேடங்களில் நடித்திருந்தாராம்.

இதனைப் பார்த்ததுமே சிவாஜிக்கும் அப்படி ஒன்பது வேடங்களில் ஏதாவது ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்றும் ஆவல் எழுந்துள்ளது. அப்படி நாடகங்கள் நடித்த காலத்தில் இருந்த சிவாஜியின் ஆசையும், கனவும் 1964 ஆம் ஆண்டு ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் உருவான நவராத்திரி என்ற திரைப்படம் மூலம் தான் நிறைவேறி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.