மகாபாரத்தில் வரும் கர்ணன், துரியோதனனின் நட்பினைத் தழுவி இயக்குநர் மணிரத்னத்தால் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தளபதி. அஞ்சலி படத்தின் வெற்றிக்குப் பின் தமிழ் சூப்பர் ஸ்டாரான ரஜினியும், மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியையும் வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார் மணிரத்னம்.
வழக்கமாக மணிரத்னம் படங்கள் என்றாலே வசனங்களுக்கு அங்கே இடம் இருக்காது. அதிகம் மௌன மொழியிலேயே ஓரிரு வசனங்களுடன் உணர்வுகளைக் கடத்தி பார்வையாளரை சீட்டின் நுனியில் அமரவைக்கும் வித்தையக் கற்றவர். பெரும்பாலும் ஒருமுறைக்கு இருமுறைதான் பார்த்தால்தான் படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பது ஆணித்தரமாக விளங்கும்.
அப்படி இருக்கையில் கமல்ஹாசனை வைத்து நாயகன் என்னும் இந்திய சினிமாவின் மைல்கல் படத்தைக் கொடுத்தவர் அடுத்து சூப்பர் ஸ்டாருக்காக தளபதியில் இணைந்தார். அதுவரை தனது ரசிகர்களை தனது ஸ்டைல் மற்றும் ஆக்சனில் திருப்திப்படுத்திய ரஜினி இந்தப் படத்தில் நடிக்கும் போது இவற்றில் ஏதும் இல்லாமல் சூர்யா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.
இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் போது ரஜினி முதன் முதலா ஷுட்டிங் செல்லும் போது அவருக்கான காஸ்ட்டியூமைக் கேட்டுள்ளார். உடனே காஸ்ட்டியூம் டிசைனர் தொள தொளவென ஒரு சட்டையும், பேண்ட்டும் கொடுத்து ஒரு ரப்பர் செருப்பும் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்தவுடன் ரஜினிக்கு அதிர்ச்சியாகியிருக்கிறது. என்னடா இது இதுவரைக்கும் நம்ம சூப்பர் ஸ்டாராக வசனம் பேசி, வில்லன்களை பந்தாடி நடிச்சோமே இது இப்படி இருக்கு என்று மனதிற்குள்ளேயே புலம்பியிருக்கிறார். மேலும் அவருக்கு எந்த மேக்கப்பும் போடவில்லை. இதனால் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார் ரஜினி.
பின்னர் ஷுட்டிங் ஸ்பாட்டில் ஷோபனாவுடன் நடிக்கும் காட்சிகள் வந்த போது பல முறை ரீடேக் வாங்கியிருக்கிறார். மணிரத்னம் ரஜினியிடம் சார் இதெல்லாம் வேண்டாம், உங்கள் கண்களில் உணர்ச்சியைக் கொண்டு வாருங்கள் வேறு எதுவும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
யோசித்த ரஜினி உடனே கமலுக்குப் போன் போட்டிருக்கிறார். நாயகன் படத்தில் மணிரத்னத்திற்கு எப்படி நடித்துக் கொடுத்தீர்கள் என்று கேட்க, அவர் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் அவரையே நடித்துக் காட்டச் சொல்லுங்கள் அவர் என்ன செய்கிறாரோ அதை அப்படியே செய்யுங்கள் என்று கூற பின்னர் ரஜினியும் கமல் சொன்னவாரே செய்துள்ளார்.
அதன்பின் மணிரத்னம் அடுத்த டேக்கிலேயே ஓ.கே. செய்திருக்கிறார். இவ்வாறு எந்த ஹீரோயிசமும் இல்லாமல் மௌன மொழிகளை முகத்திலும் உணர்ச்சியிலும் கடத்தும் வித்தையை திரையில் காட்டி தளபதியை உருவாக்கினார் மணிரத்னம். இந்தப் படம் இமாலய வெற்றி பெற்றது.