நான் சிவனா நடிக்கமாட்டேன்.. சிவாஜி மறுத்தும் திருவிளையாடல் படம் சூப்பர் ஹிட்டானது எப்படி?

By Ajith V

Published:

நடிகர் திலகம் என அறியப்படும் சிவாஜி கணேசன், தனது திரை பயணத்தில் சினிமா அழியும் வரை நிலைத்து நிற்கக் கூடிய வகையில் பல கதாபாத்திரங்களை நடித்து பெயர் எடுத்துள்ளார். நாயகன் என்ற அந்தஸ்துடன் சிவாஜி அறிமுகமான முதல் படமே தமிழ் சினிமாவில் முக்கியமான ஒருவராக விளங்க போகிறார் என பலரையும் கணிக்க வைத்திருந்தது.

அப்படி அனைவரின் கணிப்பும் நிஜமானது மட்டுமில்லாமல், ஏறக்குறைய 50 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் அருமையான ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தார். நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்த சிவாஜி கணேசன், பின்னாளில் கமல், ரஜினிகாந்த், விஜய் என அடுத்த தலைமுறை நடிகர்களுடன் இணைந்து பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார்.

படிக்காதவன், தேவர் மகன், ஒன்ஸ்மோர், படையப்பா என குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிவாஜி நடித்திருந்த நிலையில், இந்த அனைத்து திரைப்படங்களுமே மக்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இதனிடையே, சிவாஜி கணேசன் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தது பற்றியும், பின்னர் அந்த கதாபாத்திரத்தில் வற்புறுத்தலால் நடித்து அது அவரது திரைப்பட பயணத்தில் முக்கியமான கதாபத்திரமாக மாறியது பற்றியும் தற்போது காணலாம்.

ராஜராஜ சோழன், தில்லானா மோகனம்பாள் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ள பழம்பெரும் இயக்குனர் தான் ஏ.பி. நாகராஜன். சிவாஜி கணேசனை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள ஏ. பி. நாகராஜன், திருவிளையாடல் என்ற புராண கதையையும் இயக்க வேண்டும் என விருப்பப்பட்டுள்ளார்.

16 வது நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவர் எழுதிய இந்த கதை, அந்த காலகட்டத்தில் பல இடங்களில் நாடகங்களாகவும் அரங்கேறி இருந்ததால், நாகராஜன் அதனை திரைப்படமாக மாற்ற விரும்பிய போது பலரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. நாடகமாக பல பார்த்து விட்டார்கள் என்றும், புராண கதை என்பதால் அதனை ரசிகர்கள் விரும்பி பார்க்காமல் போகும் பட்சத்தில் படமாக தோல்வி அடையும் என பலர் நாகராஜனை எச்சரித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

ஆனாலும் தனது முடிவில் தீர்மானமாக இருந்த ஏ.பி. நாகராஜன், சிவாஜியிடம் இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால், திருவிளையாடல் படத்தில் இறைவன் சிவபெருமானாக நடிக்க வேண்டும் என்பதால், நான் சிவனாக நடிக்க மாட்டேன் என மறுப்பு தெரிவித்து ஓட்டம் பிடித்துள்ளார் சிவாஜி கணேசன். நான் நடித்தால் நன்றாக இருக்காது என்றும் சிவாஜி கூற, பின்னர் அவரை எப்படியோ வற்புறுத்தி நடிக்க வைத்துள்ளார் ஏ. பி. நாகராஜன்.

அதே போல, திருவிளையாடல் படத்தில் நக்கீரனாக ஏ. பி. நாகராஜனே நடித்திருந்த நிலையில், இதை சிவாஜி வற்புறுத்தலின் பெயரில் தான் அவர் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.