பிரதான் மந்திரி சூர்யா கர்: முஃப்த் பிஜிலி
PM Surya Ghar Muft Bijli Yojana: பிப்ரவரி ஒன்றாம் தேதி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் அட்டகாசமான திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதுதான் பிரதான் மந்திரி சூர்யா கர்: முஃப்த் பிஜிலி. இந்த திட்டத்தின் மூலம் 300 யூனிட் மின்சாரம் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 15ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் இந்த திட்டத்தை உறுதி செய்தார். அதன்படி வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதற்கான மானியத்தை மத்திய அரசு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்துவதற்கு மானியம் வழங்க சுமார் 7,327 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் சில விதிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.
அவை,
pmsuryaghar.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களுக்கு மத்திய அரசால் அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் விண்ணப்பித்தவர்கள் அவர்களது சொந்த செலவில் சோலார் பேனல் அமைக்க வேண்டும். அதன் பிறகு தான் இந்தத் திட்டத்தின் படி மத்திய அரசு மானியம் வழங்கும் என்று கூறப்படுகிறது.
விண்ணப்பதாரர்களுக்கு தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
வீட்டின் மின் கட்டணம் யாருடைய பெயரில் வருகிறதோ அவர்களால் மட்டும் தான் சோலார் பேனல் அமைப்பதற்கு விண்ணப்பிக்க முடியும். அதோடு அவருக்கு வங்கிக் கணக்கும் இருக்க வேண்டும்.
எவ்வளவு மானியம் கிடைக்கும்?
ஒரு கிலோ வாட்டுக்கு 30,000 இரண்டாவது கிலோ வாட்டுக்கு 30,000 மூன்றாவது கிலோ வாட்டுக்கு 18000 என மூன்று கிலோ வாட் வரை சோலார் பேனல் அமைப்பவர்களுக்கு மொத்தம் 78 ஆயிரம் ரூபாய் மானியமாக மானியமும் வழங்கப்படும். ஆனால் இந்த மானியம் உடனடியாக வழங்கப்படாது என்றும் சோலார் பேனல் அமைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு தான் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
- pmsuryaghar.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மாநிலம், மாவட்டம், மின் சேவை நிறுவனம், மின்சார எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் போன்ற தகவல்களை கொடுத்து முதலில் பதிவு செய்ய வேண்டும்.
- பின்னர் மின்சார எண் மற்றும் தொலைபேசி எண்ணின் உதவியுடன் உள்நுழைந்து சோலார் பேனல் நிறுவுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு ஒப்புதல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
- சோலார் அமைப்பதற்கு ஒப்புதல் கிடைத்து விட்டால் மின்சார வாரியத்தில் பதிவு செய்துள்ள எந்த நிறுவனத்தின் மூலமாகவும் சோலார் பேனல் அமைத்துக் கொள்ளலாம்.
- அதன் பின்னர் மீட்டருக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதனை மின்சார நிறுவனம் ஏற்றுக்கொண்டு மின் உற்பத்திக்கான அனுமதி சான்றிதழை வழங்கும்.
- சான்றிதழ் கிடைத்ததும் வங்கி தகவல்களை இணையத்தில் பதிவேற்றினால் 30 நாட்களுக்குள் மானியம் கிடைத்துவிடும் என்றும் சோலார் பேனல் பொருத்திய குடும்பத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.