இன்று காமெடி கதாபாத்திரங்களில் வரும் பலரை திரைப்படங்களில் பார்க்கும் இளைஞர்கள் பலரும் அவர்கள் உண்மையாகவே நடிகர்கள் என்று நினைத்து கொள்கின்றனர். ஆனால் அப்படி நடிகர்களாக இருக்கும் பலரும் ஒரு காலத்தில் கொடி கட்டிப்பறந்த இயக்குனர்களில் ஒருவராக இருப்பார்கள். அப்படி ஒரு பன்முக திறமை கொண்டவர் தான் ஆர். சுந்தர்ராஜன்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தமிழ் திரை உலகில் பல்வேறு அவதாரங்களில் இருந்தவர் சுந்தர்ராஜன். பெரும்பாலும் இவரை பலருக்கும் நடிகராக தெரிந்தாலும் ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட பலரை இயக்கி உள்ளார் என்பது இந்த காலத்து பசங்களுக்கு தெரியாத விஷயம். ’பயணங்கள் முடிவதில்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.
மோகன், பூர்ணிமா ஜெயராமன் நடித்த இந்த படத்திற்கு முதல் ஒரு வாரம் தியேட்டரில் ரசிகர்களை வரவில்லை. ஆனால் அதன் பின்னர் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், கவுண்டமணி காமெடி, உருக வைக்கும் கிளைமாக்ஸ் என இந்த படத்தின் தகவல்கள் ரசிகர்களுக்கு பரவியதை அடுத்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதன் பிறகு ஆர். சுந்தர்ராஜன் ஏராளமான படங்களை இயக்கினார். அவரது இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களும் நடித்தார்கள் ஆர் சுந்தரராஜனுக்கு திருப்புமுனையை கொடுத்த இன்னொரு படம் என்றால் அது ‘நான் பாடும் பாடல்’. சிவகுமார், அம்பிகா, மோகன் நடித்த இந்த படம் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று.
இதனையடுத்து அவரது இயக்கத்தில் ’வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம் விஜயகாந்த்துக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது.
’வைதேகி காத்திருந்தாள்’ வெற்றியை அடுத்து ’அம்மன் கோவில் கிழக்காலே’ திரைப்படத்தை இயக்கிய ஆர் சுந்தர்ராஜன் ’மெல்ல திறந்தது கதவு’ ’தழுவாத கைகள்’ ’காலையும் நீயே மாலையும் நீயே’ ’என் ஜீவன் பாடுது’ போன்ற படங்களை இயக்கினார்.
இந்த நிலையில், அவர் ரஜினியுடன் முதல் முதலாக ராஜாதி ராஜா என்ற படத்தின் மூலம் இணைந்திருந்தார். சூப்பர் ஸ்டார் மற்றும் ஆக்சன் நடிகர் ரஜினிக்கும் காமெடி மற்றும் ரொமான்ஸ் படங்களை இயக்கிய ஆர் சுந்தரராஜனுக்கும் எப்படி பொருத்தம் ஆகும் என்று தான் ரசிகர்கள் சந்தேகப்பட்டனர். எனவே இந்த படம் பெரிய எதிர்பார்ப்பு இன்றி தான் வெளியானது. ஆனால் படம் வெளியானவுடன் சூப்பர் ஹிட்டானது. ரஜினியின் இரட்டை வேடம், காமெடி, இசைஞானி இளையராஜாவின் இசை, ஆர் சுந்தரராஜன் இயக்கம் என பல பிளஸ் பாயிண்ட்டுகள் இந்த படத்தில் இருந்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ஆனால் அதன் பிறகு ரஜினி படத்தை அவர் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ராஜாதி ராஜா வெற்றியை அடுத்து ’தாலாட்டு பாடவா’ ’என்கிட்ட மோதாதே’ ’சாமி போட்ட முடிச்சு’ போன்ற படங்களை இயக்கினார். அதன் பின்னர் விஜயகாந்த் ரேவதி நடித்த ’என் ஆசை மச்சான்’ மற்றும் ’காந்தி பிறந்த மண்’ போன்ற படங்கள் சுமாரான வெற்றி தான் பெற்றது.
ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் நடித்த ஒரே திரைப்படம் ’காலமெல்லாம் காத்திருப்பேன்’ தான். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
’காலமெல்லாம் காத்திருப்பேன்’ படத்தை அடுத்து பெரிய அளவில் படங்களை இயக்கவில்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து தான் அவர் ’சித்திரையில் நிலாச்சோறு’ என்ற படத்தை இயக்கினார். ஆனால் அதன் பின்னர் அவர் நடிப்பதில் பிஸியாகிவிட்டதால் திரைப்படங்கள் இயக்கவில்லை.
ஆர் சுந்தர்ராஜன் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். குணச்சித்திர வேடம், அப்பா வேடம், தாத்தா வேடம், காமெடி வேடம் என அவர் இன்றும் கலக்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட அவரது நடிப்பில் ’உன்னால் என்னால்’ ’80ஸ் பில்டப்’ உள்பட ஒரு சில படங்கள் வெளியானது.
ஆர். சுந்தரராஜன் இயக்கம் மட்டுமின்றி சில படங்களுக்கு கதை வசனம் எழுதி கொடுத்துள்ளார். விஜயகாந்த் நடித்த ’நானே ராஜா நானே மந்திரி’ மோகன் நடித்த ’இது ஒரு தொடர்கதை’ போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். மேலும் சில படங்களில் அவர் பாடல்கள் எழுதி உள்ளார்.
திரையுலகில் பல்வேறு சாதனைகள் செய்த ஆர் சுந்தர்ராஜன் சின்னத்திரை உலகில் தனது முத்திரையை பதித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ’கல்யாணமாம் கல்யாணம்’ என்ற திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்தார். இதன் பின்னர் ’கல்யாண வீடு’, ’சிறகடிக்க ஆசை’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரை உலகில் பல்வேறு சாதனை செய்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்த ஆர் சுந்தரராஜன் இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.