“அவரு கழுத்த பிடிச்சு தூக்கிட்டாரு”.. ஆக்ஷன் படத்துல வர்ற மாதிரி நிஜ வாழ்க்கையில் செஞ்ச விஜயகாந்த்..

By Ajith V

Published:

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் சங்கம் என்ற பெயரில் இரண்டு அணிகளாக பிரிந்து கொண்டு பலரும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருவது தொடர்பாக ஏராளமான செய்திகளை நாம் சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கடந்து வந்திருப்போம்.

ஆனால் ஒரு காலத்தில் நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த், தனி ஆளாக பல்வேறு நல்ல விஷயங்களை செய்ததுடன் மட்டுமில்லாமல் அனைவரும் சினிமா துறையில் ஒற்றுமையாக இருக்கவும் மிக முக்கியமாக விளங்கி இருந்தார். அப்படி தங்க மனம் படைத்தவராக இருந்த விஜயகாந்த், இன்னொரு பக்கம் தன்னிடம் வேலை காட்டுபவர்களிடம் தனது ஆக்ரோஷமான முகத்தை காட்டக் கூடியவராகவும் இருந்தார். அப்படிப்பட்ட ஒருவர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தார்.

இதனிடையே சிகிச்சை பலனளிக்காமல் கடந்த டிசம்பர் மாத இறுதியில் விஜயகாந்த் உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவரையுமே மனம் உடைய வைத்திருந்தது. இனி விஜயகாந்தைப் போல ஒருவர் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் கிடைக்க மாட்டார் என்றும் பலர் வேதனையுடன் தெரிவித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் டி. சிவா, விஜயகாந்த் பற்றி சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்து ஒன்று ரசிகர்கள் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

இது பற்றி பேசிய டி. சிவா, “நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்த சமயத்தில் அதன் கடனை அடைப்பதற்காக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தமிழ் பிரபலங்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தார். சிங்கப்பூரில் நிகழ்ச்சியை முடித்து விட்ட பின்னர் அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்த நபர் பணம் தராமல் ஏமாற்றி விட்டார்.

அந்த சமயத்தில் நாங்கள் பேசி பார்த்தோம். ரொம்ப திமிராக எங்களிடம் பேசியதால், விஜயகாந்த் இது பற்றி கேட்க நாங்களும் நடந்தததை சொன்னோம். விவரத்தை தெரிந்து கொண்டு நேரடியாக அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது அந்த நபர் ஆங்கிலத்தில் பேசியதாக தெரிகிறது.

தமிழ் தெரிந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசினாலே விஜயகாந்திற்கு பிடிக்காது. இதனால் கடுப்பான விஜயகாந்த், அப்படியே சட்டையுடன் அவரை தூக்கி சுவற்றில் சேர்த்து விட்டார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரோ சுற்றி சிசிடிவி கேமரா இருப்பதாக கூறி போலீசுக்கு தெரிந்தால் என்னவாகும் என கேட்டு விஜயகாந்தை மிரட்டினார்.

ஆனால் கேப்டனோ, திருடனுக்கு சிசிடிவி போலீஸ் என்றால் திருடனை கண்டுபிடிச்ச எனக்கு எவ்வளவு டா இருக்கும் என கெத்தாக கேள்வி ஒன்றைக் கேட்டார். கழுத்தை விஜயகாந்த் இறுக்கிப் பிடித்ததும் அந்த ஒருங்கிணைப்பாளர் ஏமாற்றியதையும், பொய் சொன்னதையும் ஒப்புக் கொண்டார். பின்னர் பணத்தையும் திருப்பி தருவதாக சொன்ன பின்னர் தான் விஜயகாந்த் இறக்கி விட்டார்” என தெரிவித்தார்.