இப்படிப்பட்ட பாட்டெல்லாம் எழுதியது இவரா? மனுஷன் என்னமா எழுதியிருக்காரு பாருங்க.. கவிஞன்டா..!

By John A

Published:

ஒவ்வொரு கவிஞர்களுக்கும் ஒவ்வொரு அடைமொழிப் பெயர் வைத்து அவர்களைப் பெருமைப்படுத்துவது வழக்கம். கவியரசர் கண்ணதாசன், பாவேந்தர் பாரதிதாசன், வாலிபக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டையார் என இவ்வாறு கவிஞர்களை அடைமொழியால் வர்ணிக்கப்படும் வேளையில் ஒரு கவிஞர் மட்டும் வித்யாசமாக எக்ஸ்பிரஸ் கவிஞர் என்று இலக்கிய உலகில் அறியப்படுகிறார்.

அந்தக் கவிஞரின் பெயர்தான் தஞ்சை ராமையாதாஸ். மலைக்கள்ளன் படத்தில் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் ஒப்பற்ற பாடலான எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாட்டின் வரிகளுக்குச் சொந்தக்காரர். மாரியம்மன் என்ற திரைப்படத்தில் கவிஞராக அறிமுகமான ராமையாதாஸ், 250 படங்களுக்கு மேல் சுமார் இரண்டாயிரம் பாடல்களை எழுதியுள்ளார். புலவர் பட்டம் பெற்று தஞ்சையில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ராமையாதாஸ் பல சுதந்திரப் போராட்ட பாடல்களும் எழுதியுள்ளார்.

ஆசிரியராக இருக்கும்போதே நாடகத்துறையில் ஆர்வம் காரணமாக சுதர்சன கான சபா நாடகக் குழுவில் சேர்ந்து வாத்தியார் ஆனார். சென்னை வந்த அவருக்கு ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் டி.ஆர். மகாலிங்கம் மச்சரேகை என்ற படத்தை தயாரிக்க எண்ணியபோது அவருக்கு உதவியாக சென்னை வந்தார்.

எம்ஜிஆர் நடித்த குலேபகாவலி திரைப்படத்தில் ‘சொக்கா போட்ட நவாபு’ என்ற பாடலும் ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ போன்ற காலத்தால் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள் தஞ்சை ராமையாதாசை இலக்கிய உலகிலும், சினிமா உலகிலும் அடையாளம் காட்டியது. ராமையாதாசின் பாடல் எழுதும் வேகத்தை கண்டு, எக்ஸ்பிரஸ் கவிஞர் என்று அழைத்தார் எம்ஜிஆர்.

முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் புக் ஆன ஹீரோயின்.. கேள்விப்பட்டவுடன் அடுத்தடுத்து 30 படங்கள் கமிட் ஆன ராசி நடிகை

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான நாகிரெட்டியின் விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்த பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, மாயாபஜார் போன்ற படங்களுக்கு வசனம் பாடல்களை எழுதி புகழ் பெற்றார் தஞ்சை ராமையாதாஸ்.

கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே என்ற பாடலையும் எழுதியவர் இவர்தான். காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கிறார் தஞ்சை ராமையாதாஸ்.

50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பல பாடல்கள் இன்றைய தலைமுறையை கவர்ந்து கொள்வதில் ஆச்சரியம் இல்லை அப்படி ஒரு பாடல்தான் இன்றும் காதலிப்பவர்களின் சூப்பர் ஹிட் பாடலாக விளங்கும் கண்ணாலே பேசி பேசி கொல்லாதே என்ற பாடல்.

ஆரூர்தாஸ், ஏபி நாகராஜன் உள்ளிட்ட திரை ஜாம்பவான்களை அறிமுகப்படுத்தி அவர்களின் திறமையை வளர்த்தவரும் இந்த எக்ஸ்பிரஸ் கவிஞர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.