சினிமாக்களில் நாயகன், நாயகி ஜோடியைத் தான் நாம் இன்று வரை ரசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாயகன் – நாயகி அல்லாது ஒரு நகைச்சுவை ஜோடியை தூக்கி வைத்துக் கொண்டாடினோம் என்றால் அது கவுண்டமணி-செந்தில் காமெடிக் கூட்டணி என்று சொல்லலாம். இருவரும் திரையில் காட்டாத அலப்பறைகளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர்.
வைதேகி காத்திருந்தாள் ஆல்இன்ஆல் அழகுராஜா காமெடியில் ஆரம்பித்த இவர்களது பயணம் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தது. குறிப்பாக வாழைப்பழ காமெடிக்காகவே ஒரு வருடம் ஓடியது கரகாட்டக்காரன் திரைப்படம். இந்த ஜோடி எப்படி திரையில் இணைந்தது தெரியுமா?
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செந்திலை சினிமாவில் அறிமுகம் செய்ததே கவுண்டமணிதானாம். இருவரும் சினிமாவிற்கு வரும் போது ஏதோ ஒரு கடைகளில் தனித்தனியாக வேலை பார்த்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் செந்திலை அவ்வப்போது கவுண்டமணி பார்த்ததும் உண்டாம்.
அந்தக் காலகட்டங்களில் தியேட்டரில் ஸ்கிரீன் கட்டி நாடகங்களை போடுவார்களாம். அப்படி ஒரு வாய்ப்பு கவுண்டமணிக்கு வந்திருக்கிறது. போய் நடித்தும் கொடுத்தாராம். அதன் பிறகு அந்த நாடக முதலாளி ஸ்கிரீன் பிடிக்க யாராவது இருந்தால் வரச் சொல் என கவுண்டமணியிடம் கூறியிருக்கிறார். அப்போது கவுண்டமணியின் மனதில் தோன்றியவர் செந்தில்.
அப்போது செந்தில் ஒரு கடையில் 7 ரூபாய்க்கு வேலை பார்த்து வர நான் வர மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். உடனே கவுண்டமணி உனக்கு நான் 10 ரூபாய் வாங்கித் தருகிறேன் என கூறி செந்தில் முதலாளியிடமும் அனுமதி பெற்று அங்கு அழைத்துப் போனாராம். ஒரு சமயம் நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது போலீஸ் கேரக்டரில் நடிப்பவர் அன்று வரவில்லையாம்.
என்ன செய்வது என யோசிக்கையில் ஸ்க்ரீனை பிடித்துக் கொண்டிருந்த செந்திலிடம் அந்த போலீஸ் ஆடையை கொடுத்து நடிக்க சொன்னாராம் கவுண்டமணி. அதிலிருந்தே இருவரும் நடிப்பதில் கவனம் செலுத்த அந்த இணை வெள்ளித்திரையிலும் ஜொலிக்க ஆரம்பித்தது. இப்படித்தான் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர்.