வைகைப் புயல் வடிவேலு ஒரு பாதியில் காமெடியாகவும், மறுபாதியில் சீரியசாகவும் நடித்து பெயர் பெற்ற படம் தேவர் மகன். படத்தில் இசக்கி கதாபாத்திரம் இவரின் சினிமா வாழ்க்கையே புரட்டிப் போட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார். அவரின் இந்தப் புகழுக்கு காரணம் இருவர். ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன், மற்றொருவர் சிவாஜிகணேசன். தேவர் மகன் படத்தில் இவர்களுடனேயே இவரது கதாபாத்திரம் தொடருமாறு அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த இசக்கி கதாபாத்திரத்தை வைத்துத்தான் இயக்குநர் மாரிசெல்வராஜ் மாமன்னன் கதையை வடிவேலுவை மனதில் வைத்து எழுதி அதில் அவரை அற்புதமாக நடிக்க வைத்திருந்தார். முதன் முதலாக சீரியஸ் ரோலில் உதயநிதியின் அப்பாவாக நடித்து அப்ளாஸ் வாங்கியிருந்தார் வடிவேலு.
தேவர் மகன் பட ஷுட்டிங்கின் போது நடந்த சம்பவத்தால் சிவாஜி கணேசனிடம் திட்டு வாங்கி பின் அந்த காட்சியில் ஒழுங்காக நடித்திருக்கிறார் வடிவேலு. இதுபற்றி அவர் பேட்டி ஒன்றில் கூறும் போது,“தேவர் மகன் படம் நடிக்கையில் அப்போது தான் நான் சினிமாவுக்கு வந்த புதுசு. சூப்பரா நடிக்கணும்னு ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப்படத்தில் கமலோட அப்பா சிவாஜி இறந்து போய் விடுவார். பக்கத்தில் குழந்தைகள்… கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும் இருப்போம்.3
கமல் சார் கொஞ்சம் தூரத்தில் இருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம் தத்ரூபமா அழணும்னு சொல்வார். ஷாட் ரெடின்னு சொன்னாங்க. உடனே நான் ஐயோ எங்களை விட்டுப் போயிட்டீங்களே ஐயா… ஐயா…ன்னு கத்தி அழ ஆரம்பிச்சிட்டேன்.
பேசி கொஞ்ச நேரம் கூட ஆகல. கட் கட் னு சொன்னது பிணம். சிவாஜி சார் தான்… என்னைப் பார்த்து இங்க வாடா… என்றார் முறைத்தபடி. நானும் பயந்தபடி வந்தேன். நீ ஒருத்தன் அழுதா போதுமாடா… மத்தவன் யாரும் அழ வேண்டாமா…? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா தான் அழறான்… நீ ஏன்டா ஊரையேக் கூட்டுற…
நீ கத்துற கத்துல உன் உசுரும் போயிடப்போகுதுன்னு சொன்னாரு. அது மட்டும் இல்லாம துண்டை வாயில் வெச்சிக்கிட்டு கமுக்கமா விசும்பி அழு. அது போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதை படுவே படுவான்னு சொன்னார். அதை இப்ப நினைச்சாலும் எனக்கு சிரிப்பு வருது’ என்று அந்தப் பேட்டியில் வடிவேலு கூறியிருந்தார்.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
