கன்னாபின்னமாக செலவு செய்து வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைக்காத கலைவாணர் என்.எஸ்.கே., இருந்தாலும் இது ஓவர்..!

By John A

Published:

நாடக மேடை மற்றும் சினிமா மூலமாக தமிழ் மக்களுக்கு தன்னுடைய கூரிய நகைச்சுவை வசனங்களால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் சினிமாவிற்குள் நுழைந்தார். திரையுலகில் பல நற்கருத்துக்களை பாடியும், நடித்தும் புகழ்பெற்றவர் பலருக்கு உதவும் இரக்க குணத்தையும் பெற்றிருந்தார்.

இதனால் தான் நடித்து சம்பாதித்த பணங்களில் பெரும்பாலும் மற்றவர்களுக்கு உதவுவதிலேயே செலவிட்டவர். இதனால் தனது வாரிசுகளுக்கு பிற்காலத்தில் எந்த சொத்தும் சேர்த்து வைக்காமல் இறுதிவரை வாழ்ந்தவர். இதற்கு இவர் சொல்லும் காரணம் சற்று சுவாரஸ்யமானது யோசிக்கக் கூடியது.

ஒரு நாள் கலைவாணர் தம் நண்பர்களான ஜீவானந்தம், தென்காசி சண்முகசுந்தரப் புலவர் ஆகியோருடன் பேசிக் கொண்டிருக்கையில், “நிறைய சம்பாதிக்கிறீர்கள் ஆனால் உடனே செலவு செய்து விடுகிறீர்களே! ஊராருக்கெல்லாம் உதவும் நீங்கள் உங்கள் குடும்பத்திற்கென ஏதாவது ஒதுக்கி வைத்திருக்கிறீர்களா?” என சண்முகசுந்தரப்புலகர் கேட்டார்.

அதற்கு கலைவாணர் உதாரணமாக ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார். “ஓர் ஊரில் ஒரு பணக்கார இளைஞர் இருந்தார். ஒரு நாள் அவர் தனது நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய மனைவி வந்து வாருங்கள் பழையது சாப்பிடலாம் என்று கணவரை அழைத்தார்.

ரசிகர்களின் பாராட்டால் அதிர்ந்து போன நடிகை லெட்சுமி.. அப்படி என்ன சொன்னாங்க தெரியுமா?

இப்படியாக ஒவ்வொரு முறையும் பத்துப் பேருக்கு முன்பாக பழையது சாப்பிடலாம் என்று மனைவி கூறி வந்தது அந்த இளைஞருக்கு வினோதமாகவும், எரிச்சலாகவும் இருந்தது. மற்றொரு நாள் வழக்கம் போல், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞரை பார்த்து அவர் மனைவி அதேபோல் பழையது சாப்பிடலாம் என்று மனைவி அழைத்தவுடன் சற்றுக் கோபமாக எழுந்து உள்ளே சென்றார். ஆனால் வகை வகையான பதார்த்தங்கள் இலையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அப்பெண்ணோ சுடச்சுட சோற்றைப் பரிமாறினார்.

அப்போது உடனே அந்த இளைஞர் கேட்டார். “எப்போது பார்த்தாலும் நண்பர்களுக்கு பேருக்கு மத்தியிலே பழையது சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடுகிறாயே, இங்கே என்ன பழைய சோறா போடுகிறாய்? நெய், வடை, பாயாசத்தோடு சுடு சோறல்லவா போடுகிறாய்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். கஞ்சப்பிரபு என்றல்லவா எண்ணுவார்கள்?” என்று அவர் கூற சட்டென அவர் மனைவி, ”நீங்கள் சுடச்சுட புதிதாக ஏதாவது சம்பாதிக்கிறீர்களா என்ன? உங்கள் அப்பா சம்பாதித்து வைத்துவிட்டுப் போன பழைய சொத்தை வைத்துக் கொண்டுதானே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று பதிலளித்தார்.

அந்த இளைஞருக்கு சுரீரென உரைத்தது. இவ்வாறு கதையை முடித்த கலைவாணர் தொடர்ந்தார், நான் சம்பாதித்த பழையதைக் கொண்டிருக்க வேண்டுமா? அவர்களே உழைத்து சுடுசோறு சாப்பிடட்டுமே! ”

உண்மையாகவே கலைவாணர் சொன்னதுபோல் தம் வாரிசுகளுக்குச் சொத்துக்களை அல்லது பணத்தைச் சேமித்து வைத்துவிட்டுப் போகவில்லை. மாறாக சமுதாயத்தில் தான் விதைத்த நற்கருத்துகளின் வாயிலாக சிந்திக்கும் திறனை விட்டுச் சென்றிருக்கிறார். அவரின் வாரிசுகள் கதையில் வரும் பழையது சாப்பிடாமல் தாங்களே உழைத்து கௌரவமாக வாழ்கிறார்கள்.