ஊர்ப் பாசத்தில் பாக்யராஜ் செஞ்ச தரமான வேலை.. காமெடி கிங் கவுண்டமணியை அறிமுகப்படுத்தியது இப்படித்தான்!

By John A

Published:

தமிழ் சினிமாவின் காமெடி கிங் என்று போற்றப்படுபவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளனர். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கவுண்டமணியின் காமெடிக்கு புதிதாக ரசிகர்கள் உருவாகிக் கொண்டே தன் இருப்பார்கள். ரஜினி, கமல், விஜய், அஜீத், சிம்பு என இந்தக் காலத் தலைமுறையினருடனும் இணைந்து நடித்து காமெடியில் அசத்தி வருபவர்.

1990-களில் ஹீரோக்களைக் காட்டிலும் அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணி பல படங்களின் வெற்றிக்கு தன்னுடைய காமெடி பலத்தால் உறுதுணையாக நின்றார்.

ஆனால் இவர் திரையுலகில் நுழைவதற்கு அடித்தளமாக இருந்தவர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்து அவரிடம் சினிமா கற்றுக் கொண்டு பின் தனக்கென தனி பாதையை தேர்ந்தெடுத்து திரைக்கதை ஜாம்பவானாகத் திகழும் பாக்யராஜ் தான். கவுண்டமணியும், பாக்யராஜும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

விஜயகாந்தை மறந்து போன சிவாஜி.. இருந்தாலும் கேப்டனின் அந்த மனசு இருக்கே..!

கவுண்டமணியின் இயற்பெயர் சுப்ரமணி. சொந்த ஊரில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தனது நடிப்பின் போது இடையில் கவுண்ட்டர் கொடுத்து சீனையே கலகலப்பாக மாற்றி விடுவாராம். எனவே அருக்கு Counter மணி என்ற பெயர் வந்தது.  சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருந்த கவுண்டமணியை பாரதிராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்து ‘பதினாறு வயதினிலே‘ படத்தில் ரஜினியோடு வரும் காட்சிகளில் நடிக்க வைத்தவர் பாக்கியராஜ்தான். அதேபோல், அடுத்து பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் கவுண்டமணிக்கு படம் முழுக்க வரும் வேடத்தையும் வாங்கி கொடுத்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கவுண்டமணி பற்றி பேசிய பாக்யராஜ் ‘படத்தின் டைட்டிலில் கவுண்டமணியின் பெயரை போட வேண்டும் என நினைத்தேன். அவரை மணி-யாக மட்டுமே எனக்கு தெரியும். ‘அவர் முழுபேர் என்னப்பா?’ என கேட்டபோது ‘கவுண்டமணி’ என சொன்னார்கள். நானும் அப்படியே எழுதி கொடுத்து விட்டேன். அதன்பின்னர்தான் அவரின் பெயர் ‘கவுண்ட்டர் மணி’ என சொன்னார்கள். ஆனால், அதற்குள் படமே வெளியாகி அவரின் பெயர் ‘கவுண்டமணி’ என வந்துவிட்டது. அதன்பின் அதுவே அவரின் பெயராகவும் மாறிவிட்டது’ என பாக்கியராஜ் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.