பணம் கேட்கப் போன இடத்தில் பாலுமகேந்திராவுக்கு கடன் கொடுக்காத கமல்.. என்ன செய்தார் தெரியுமா?

By John A

Published:

ஒளிப்பதிவாளர், இயக்குநர் பாலுமகேந்திராவுக்கும், உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே சினிமா காதலர்கள். உள்ளுர் படம் தொடங்கி உலகப் படங்கள் வரை விரிவான பேசி விவாதம் செய்து தங்கள் அறிவுப் பசியை மாறி மாறி தணித்துக் கொண்டவர்கள். கமல்ஹாசனைக் கொண்டு மூன்றாம்பிறையை இயக்கி உன்னத சினிமாவை உலகிற்குத் தந்தவர்.

ஒருமறை பாலுமகேந்திராவிற்குப் பணத் தட்டுப்பாடு வர பலரிடம் முயற்சி செய்தும் ஒன்றும் அமையாத வேளையில் இறுதியாக கமல்ஹாசனிடம் சென்றிருக்கிறார். உற்ற நண்பனிடம் எப்படி பணம் கேட்பது என்று அவருக்குள் ஒரு பெரிய மனப் போராட்டமே இருந்தது.

சரி கேட்டுவிடலாம் என்ற உறுதியோடு உடனே கமல் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டுவிட்டார் பாலுமகேந்திரா. பாலுமகேந்திரா, தான் பணம் கேட்க வந்திருக்கும் விஷயத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் முன்..வழக்கம் போல உலக சினிமாக்கள் பற்றி சுவாரசியமாக பேச ஆரம்பித்தார் கமல். ஏனென்றால் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பாலுமகேந்திராவிடம்தான் பேச முடியும். பாலு மகேந்திராவும் அதே சுவாரஸ்யத்தோடு பேச… மணிக்கணக்கில் பேச்சு நீண்டு கொண்டே போனது.

நடிகர் திலகம் சிவாஜியின் கோவிலாக விளங்கிய சாந்தி தியேட்டர்.. இத்தனை வரலாறு படைத்ததா?

ஆனால் பாலுமகேந்திராவின் மனதுக்குள் எப்போது எப்படி பணத்தை கேட்பது என்ற சிந்தனை ஓடிக் கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் கமல் பேச்சை நிறுத்திவிட்டு கடிகாரத்தைப் பார்த்தார். “அடடே… பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. நான் ஷூட்டிங் போக வேண்டுமே..! கொஞ்சம் இருங்கள், வந்துவிடுகிறேன்.”

இப்படி சொல்லிவிட்டு எழுந்து மாடிக்குப் போய் விட்டாராம் கமல். பாலுமகேந்திரா என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துப் போய் அமர்ந்திருந்தார். ஷூட்டிங் புறப்படும் இந்த நேரத்தில் கமலிடம் பணம் கேட்பது நாகரீகமாக இருக்காது என்று எண்ணி அவரும் புறப்படத் தயாரானார். சரி வேறுயாரிடமாவது பணம் கேட்கலாம் என்று எழ, கமல் மாடியிலிருந்து விறு விறு என்று வேகமாக இறங்கி பாலுமகேந்திராவின் பக்கத்தில் வந்தார். கமலின் கையில் ஒரு கனத்த கவர் இருந்தது.

“இந்தாங்க” என்று அதை பாலுமகேந்திராவிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தார் பாலுமகேந்திரா. அவர் எதிர்பார்த்ததைவிட அதிகமான தொகை அந்தக் கவருக்குள் இருந்தது. என்ன பேசுவது எனத் தெரியாமல் பாலுமகேந்திரா திகைத்து நிற்க, கமல் சொன்னாராம். “உங்களை எனக்குத் தெரியும் பாலு சார். இது கடன் இல்லை. அட்வான்ஸ். நம்ம ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிற அடுத்த படத்தை, நீங்கதான் டைரக்ட் பண்றீங்க. உற்சாகமா வேலையை ஆரம்பிங்க…”

எதுவும் பேசாமல் கமலை கட்டி அணைத்துக்கொண்டார் பாலுமகேந்திரா. அப்படி கமலுக்கு கோகிலா, மூன்றாம் பிறைக்கு அடுத்து பாலுமகேந்திரா இயக்கிய படம்தான் சதிலீலாவதி.